கைவிரல் நகத்தால் 9.98 கிலோ எடையைத் தூக்கி உலக சாதனை படைத்த கல்லூரி மாணவர்
புதுக்கோட்டையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் தனது கையின் கட்டை விரல்.....
புதுக்கோட்டை: புதுக்கோட்டையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் தனது கையின் கட்டை விரல் நகத்தால் 9.98 கிலோ எடையை 55 வினாடிகளில் தூக்கிப்பிடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் ஏ. பிரதாப்(21). கீரனூர் அருகிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் இவர் கடந்த 2 ஆண்டுகளாக தனது கட்டை விரல் நகத்தால் இரும்புக் கம்பிகளைத் தூக்கி உலக (கின்னஸ்) சாதனை செய்யும் நோக்கில், அதற்காக பயிற்சிகளையும் எடுத்து வந்தார். இந்நிலையில், கடந்த பிப்.11 -ல் தனது கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், 9.58 கிலோ எடையை 1 நிமிடம் 30 வினாடிகள் தூக்கி நிறுத்தி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
இதைத்தொடர்ந்து, புதுகையில் ஞாயிற்றுக்கிழமை ரோட்டரி சங்க விழாவில் கின்னஸ் புத்தக நிறுவன பார்வையாளருமாக டிராகன் ஜெட்லி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், பங்கேற்ற மாணவர் அ. பிரதாப், இதுவரை உலக(கின்னஸ்) சாதனையாக இருந்து வந்த 8.66 கிலோ எடையை விஞ்சும் வகையில், தனது கட்டை விரல் நகத்தால் 9.98 கிலோ இரும்புக்கம்பியை 55 வினாடிகளில் தூக்கி நிறுத்தினார். இதன் மூலம் முந்தைய கின்னஸ் உலக சாதனையாக இருந்த 8.66 கிலோ எடையை 28 வினாடிகள் தூக்கிய ஆந்திராவைச் டிக்காபானுபிரகாஷின் சாதனையை முறியடித்து தற்போது உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவரது சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவது, அதற்கான சான்றிதழ் வந்தவுடன் உறுதியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர் பிரதாப்பை ரோட்டரி தன்னார்வ நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகள் பாராட்டி சான்றிதழ், கேடயம் வழங்கினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.