FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஸ்டெர்லைட் தொடர்பான பசுமைத் தீர்ப்பாய ஆணைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு  

நிர்வாக ரீதியிலான பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்ல நிர்வாகத்திற்கு அனுமதியளித்த பசுமைத் தீர்ப்பாய ஆணைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.  

Updated On : 13 ஆகஸ்ட் 2018, 4:36 pm IST
பகிர்:

புது தில்லி: நிர்வாக ரீதியிலான பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்ல நிர்வாகத்திற்கு அனுமதியளித்த பசுமைத் தீர்ப்பாய ஆணைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.  

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக உரிமையாளர்களான வேதாந்தா நிறுவனம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்றும், ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய தனியாக குழு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

Advertisement

Advertisement

இந்த மனுவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிட்டது.

ஆனால், தமிழக அரசின் வாதத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிராகரித்ததோடு,  ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வேதாந்தா குழுமம் சார்பில் தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

மனு மீதான விசாரணையின் பொழுது காற்று, நீர் மாசு ஏற்படுத்தாத வகையில் ஆலை செயல்படுவதாகவும், விதிகள் மீறப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், ஆலை மூடப்பட்டதால் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து காப்பரை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் வேதாந்தா குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையானது வியாழனன்று பசுமைத் தீர்ப்பாயத்தில், அதன் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் முன்னிலையில் நடைபெற்றது. அப்பொழுது ஆலை நிர்வாகத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. அத்துடன் மிக முக்கியமான நிர்வாகக் கோப்புகள் மற்றும் கணிப்பொறிகள் ஆகியவை ஆலையின் வளாகத்தில் உள்ளன. எனவே குறைந்த பட்சமாக 30 நாட்களாவது ஆலை செயல்பட அனுமதிக்க வேண்டு என்று கோரிக்கை வைத்து வாதாடினார்.

ஆனால் தமிழக அரசுத் தரப்பில் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆலையின் செயல்பாடுகள் மற்றும் விதிமீறல்கள் தொடர்பான முக்கியமான கோப்புகளை அவர்கள் அழித்து விடக் கூடும் என்ற வாதம் முன்வைக்கபட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோயல் நிர்வாகப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாக அதிகாரிகள் செல்லலாம் என்று அனுமதியளித்து உத்தரவிட்டார். ஆனால் அதே சமயம், கண்டிப்பாக எந்த விதமான உற்பத்தி பணிகளும் நடைபெறக் கூடாது என்றும் அவர் தனது உத்தரவில் தெளிவுபடுத்தினார்.

அதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் ஞாயிறன்று ஆலோசனை நடத்தினர். 

தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் ஐஏஎஸ், தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் ஐஏஎஸ், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுத்தின் ஐஏஎஸ், சட்டத்துறை செயலாளர் சு.ச. பூவலிங்கம், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் செயலர் டி.சேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பசுமைத் தீர்ப்பாய ஆணைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் திங்களன்று மேல்முறையீடு செய்துள்ளது.   

இந்த மனுவினை அவசர வழக்காக கருதி விசாரிக்க தமிழக அரசின் வழக்கறிஞர்கள் செவ்வாயன்று காலை உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ஒருவர் முன் ஆஜராகி, வலியுறுத்துவார்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments