FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தாரமங்கலம் அமரகுந்தி பகுதிகளில் 7 நடுகல்கள் கண்டெடுப்பு

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அமரகுந்தி பகுதிகளில் 7 நடுகல்களை சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் செவ்வாய்க்கிழமை கண்டெடுத்துள்ளனர்.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அமரகுந்தி பகுதிகளில் 7 நடுகல்களை சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் செவ்வாய்க்கிழமை கண்டெடுத்துள்ளனர்.
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகளூர் பொன்.வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம், பெருமாள் ஆசிரியர், ஜீவநாராயணன், கவிஞர் மன்னன் ஆகியோர் அடங்கிய குழு அமரகுந்தி, தாரமங்கலம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது வீரக்கல், சதிகல், குதிரைக்குத்திப்பட்டான்கல், புலிகுத்திப்பட்டான்கல் என 7 நடுகல்களைக் கண்டறிந்துள்ளனர். 
கெட்டிமுதலிகள் 16- ஆம் நூற்றாண்டில் அமரகுந்தியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் நாயக்க மன்னர்களின் கீழ் குறுநில மன்னர்களாக பாளையக்காரர்களாக ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்கள் காலத்தில் பல போர்கள் நடைபெற்றுள்ளன. அந்தப் போர்களில் இறந்தவர்களுக்கு நடுகல்கள் வைக்கப்பட்டன. வீரர்கள் இறந்தவுடன், அவர்கள் மனைவியர் சிலர் உடன்கட்டை ஏறி உயிரிழந்தனர். அவர்களுக்காக சதிகல் வைக்கப்பட்டது. போரில் உயிரிழந்த ஒரு குதிரைக்கும் வீரனோடு இணைத்து நடுகல் வைக்கப்பட்டுள்ளது.
அமரகுந்தி எல்லம்மாள் கோயில் அருகே வீரக்கல் உள்ளது. இதன் காலம் 16 -ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். 72 செ.மீ. அகலமும், 2 6 செ.மீ தடிமனும், 65 செ.மீ. உயரத்துடன் உள்ள வீரன் ஒரு பலகைக் கல்லில் படைப்பு சிற்பமாகக் காட்டப்பட்டுள்ளான். வீரனின் வயிற்றுக்குக் கீழுள்ள பகுதி மண்ணில் புதைந்துள்ளது. இடது பக்கம் வளைந்த கொண்டை நேர்த்தியாக உள்ளது. கொண்டை ஒரு கயிற்றால் கட்டப்பட்டுள்ளது. காதில் அணிகலன், கழுத்தில் சரபளியும், தடிமனான ஒரு அணிகலனும் காட்டப்பட்டுள்ளது. தோளில் வாகு வளையம், கையில் ஒரு வாளை உறுதியாகப் பற்றியுள்ளான். வீரனின் தலைக்கு மேலே ஒரு சதுரமான கட்டத்தில் சிறிய அளவில் ஒரு பெண் வணங்கிய நிலையில் உள்ளாள். வீரனின் மார்புக்கு அருகே ஈட்டிமுனை தெரிகிறது. போரில் இறந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம்.
அமரகுந்தி அருகே சின்னசோரகை, குண்டுதாசன் வளவு என்ற இடத்தில் ஒரு சதிகல் உள்ளது. 180 செ.மீ. நீளம், 120 செ.மீ. அகலம், 26 செ.மீ தடிமனும் உள்ளதாக கல்வீடு அமைந்துள்ளது. நடுகல் வீரன் 85 செ.மீ உயரம், 72 செ.மீ. அகலமும் உள்ள புடைப்பு சிற்பமாகக் காட்டப்பட்டுள்ளான். அள்ளி முடிந்த நேரான கொண்டை, கழுத்தில் சவடி, சரபளி போன்ற கழுத்தணியும் உள்ளது. முதுகில் அம்புக்கூடு, இடையில் கச்சை, கச்சையில் குறுவாளும் உள்ளது. கால்களுக்கு இடையே சுங்கு நீண்டு காணப்படுகிறது. இடது கையில் வில்லைப்பற்றி, வலது கையால் அம்பை நாணில் தொடுத்து எய்யும் நிலையில் வீரன் உள்ளான். இடது காலை முன்வைத்து வலது காலை உயர்த்தி போருக்குச் செல்லும் நிலையில் உள்ளான். வீரனுக்கு வலது புறம் அவனை விட சற்று உயரம் குறைவான நிலையில் பெண் ஒருத்தி காட்டப்பட்டுள்ளாள். இவள் வீரனின் மனைவியாக இருக்கக் கூடும். பெண் வலதுப் பக்க கொண்டையுடன் நேராக நின்ற நிலையில் உள்ளாள். மேற்கையில் வாகுவளையம், கையில் மதுக்குடம், முன் கையில் வளையல், இடை முதல் பாதம் வரை முழு ஆடை காட்டப்பட்டுள்ளது. பெண்ணுக்கு அருகே சிறுவன் உள்ளான். போரில் வீரன் இறந்ததால், அவன் மனைவி குழந்தையுடன் சதி ஏறி இருக்கக் கூடும்.
சின்னசோரகையில் ஒரு கல் வீட்டுக்குள் குதிரைகுத்திப்பட்டான் நடுகல் உள்ளது. இந்த நடுகல்லின் கீழ்ப்பகுதி பூமிக்குள் புதைந்துள்ளது. ஒரு பலகைக் கல்லில் புடைப்பு சிற்பமாக நடுகல் வெட்டப்பட்டுள்ளது. 45 செ.மீ. உயரமும், 40 செ.மீ. அகலமும் உடையதாக உள்ளது. பாய்ந்துசெல்லும் நிலையில் ஒரு குதிரையும், குதிரை மீது அமர்ந்த நிலையில் ஒரு வீரனும் காட்டப்பட்டுள்ளான். இப் பகுதியில் மேலும் ஆய்வுசெய்தால் இன்னும் பல வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments