FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரூ.185 கோடியில் கடலோரக் காவல் படை ரோந்து கப்பல் விஜயா': இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் ரூ.185 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட கடலோரக் காவல்படை ரோந்து கப்பல் விஜயா' சென்னைத்

30 ஜனவரி 2024, 10:15 pm IST
கடலோரக் காவல்படை ரோந்து கப்பல் ஐ.சி.ஜி.எஸ். விஜயா. (கோப்பு படம்)
பகிர்:


சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் ரூ.185 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட கடலோரக் காவல்படை ரோந்து கப்பல் விஜயா' சென்னைத் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளது.
சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் எல் அண்ட் டி தனியார் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு பாதுகாப்பு அமைச்சகத்துக்குத் தேவையான கப்பல்கள் இங்கு கட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடற்படை, கடலோரக் காவல்படைக்குத் தேவையான ரோந்துக் கப்பல்கள், இடைமறிக்கும் படகுகள் உள்ளிட்டவை இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறை அமைச்சகத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் எல் அண்ட் டி நிறுவனம் கடலோரக் காவல் படைக்கு 7 ரோந்துக் கப்பல்களை வடிவமைத்துக் கட்டிக் கொடுக்கும் ஒப்பந்தத்தை பெற்றது. முதல் ரோந்து கப்பலான விக்ரம்' கடந்த ஆண்டு கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் ஆயுதங்கள் பொருத்தப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி முறைப்படி பணியில் இணைக்கப்பட்டது. 
இதையடுத்து இங்கு கட்டமைக்கப்பட்ட இரண்டாவது ரோந்து கப்பலான விஜயா' கடந்த ஜன.20-ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 8 மாதமாக பாதுகாப்பு தளவாடங்கள், தொலைத்தொடர்பு கருவிகள் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இங்கு தயாரிக்கப்பட்ட மூன்றாவது ரோந்துக் கப்பல் வீரா' முதற்கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவுற்று கடந்த ஆக.28-ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது. மேலும் 4, 5 மற்றும் 6-ஆவது ரோந்து கப்பல்களைக் கட்டமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
விஜயா'வின் சிறப்பு அம்சங்கள்: ரூ.185 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டுள்ள ரோந்து கப்பலான விஜயா' 2,100 மெட்ரிக் டன் எடையும் 98 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இக்கப்பல் மணிக்கு அதிகபட்சமாக 26 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியது. மேலும் கரைக்குத் திரும்பாமல் சுமார் 5,000 கடல் மைல் தூரம் பயணிக்கும் வகையில் பல்வேறு நவீன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கப்பலின் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வசதி ஒரே அறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதி, மாசுக் கட்டுப்பாட்டுக் கருவிகள், கண்காணிப்பு கருவிகள் அதிநவீன ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இக்கப்பல்களின் பெரும்பான்மையான பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பது சிறப்பம்சமாகும்.
102 பேர் பணியில் இருப்பர்: இக்கப்பலில் 11 உயர் அதிகாரிகள் உள்பட 102 பேர் பணியில் இருப்பர். ரோந்து பணியின்போது எத்தகைய விளைவுகளையும் சந்திக்கும் வகையில் இக்கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கடலோரக் காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு: கடலோரக் காவல்படையை நவீனப்படுத்தும் நோக்கில் பழைய கப்பல்களுக்கு படிப்படியாக ஓய்வளிக்கப்பட்டு அதிநவீன புதிய ரோந்துக் கப்பல்கள் கட்டமைக்கப்பட்டு தொடர்ந்து பணியில் சேர்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதிய ரோந்துக் கப்பலான விஜயா' நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நிகழ்ச்சி சென்னைத் துறைமுக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பாதுகாப்பு அமைச்சக செயலர் சஞ்சய் மித்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரோந்து கப்பல் விஜயாவை' முறைப்படி படையில் இணைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 
இந்நிகழ்ச்சியில் கடலோரக் காவல் படை தலைமை இயக்குநர் ராஜேந்திர சிங், கிழக்கு பிராந்திய ஐ.ஜி. பரமேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments