FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

விநாயகர் சதுர்த்தி விழா சென்னையில் வியாழக்கிழமை வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:


விநாயகர் சதுர்த்தி விழா சென்னையில் வியாழக்கிழமை வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் வித்தியாசமான வடிவங்களில் கண்ணைக் கவரும் வகையில் விநாயகர் சிலைகளை அமைத்திருந்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வியாழக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் பல்வேறு அமைப்பை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் நிறுவி வழிபாடு செய்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான கொண்டாட்டம் புதன்கிழமை முதலே தொடங்கியது. தியாகராய நகர், கொளத்தூர், திருவல்லிக்கேணி, சௌகார்பேட்டை என நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோயில்கள் புதன்கிழமை இரவு முதலே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. 
சிறப்பு வழிபாடு: பொதுமக்கள் வியாழக்கிழமை காலை முதலே கடைகளுக்குச் சென்று களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி வந்து வீட்டில் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, சுண்டல் உள்ளிட்டவற்றை செய்து படையலிட்டனர். கோயில்களில் விநாயகருக்கு பால், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை வழிபட்டனர். மாலை 5 மணிக்கு மேல் நகரின் முக்கிய வீதிகளில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. 
எழில்மிகு தோற்றங்கள்: சென்னையின் பல்வேறு பகுதிகளில் சுமார் 2, 520 விநாயகர் சிலைகளை வைக்க காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், 2,800-க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன. இச்சிலைகள் பொதுமக்களின் கவனத்தைக் கவரும் வகையில் அமைந்திருந்தன.
குறிப்பாக, சென்னை திருவல்லிக்கேணி திருவெட்டீஸ்வரன் கோயில் அருகில் இந்து முன்னணி சார்பில் 35 -ஆவது ஆண்டாக அமைக்கப்பட்டுள்ள 16 அடி வீரவிக்னேஸ்வரர், தங்க சாலையில் கணேஷ் மண்டல் அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்ட மிண்ட் ஷா ராஜா', வடபழனி - சைதாப்பேட்டை சாலையில் வைக்கப்பட்டுள்ள ஆஞ்சநேயர் மேல் அமர்ந்திருக்கும் விநாயகர், நெசப்பாக்கத்தில் குதிரை சாரதியாக காட்சியளிக்கும் விநாயகர், பாரிமுனை காசி செட்டி தெருவில் பல்வேறு வண்ணங்களில் ஒளிரும் விநாயகர், கே.கே.நகரில் ராமபாண விநாயகர், கோட்டூர்புரம் என்.எஸ்.கே சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள புல்லட் விநாயகர், கோடம்பாக்கம் புலியூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுடன் காட்சியளிக்கும் 10 அடி உயர விநாயகர் என பல்வேறு இடங்களில் கண்களையும், கருத்தையும் கவரும் வகையில் அழகிய சிலைகள் வைக்கபட்டுள்ளன.
அலங்காரப் பொருள்கள் விற்பனை: விநாயகர் சதுர்த்தியையொட்டி தெருமுனைகள், வீதிகளில் ஆங்காங்கே பிள்ளையார், குடைகள், தென்னை, மாவிலை தோரணங்கள், வாழைமரங்கள், பொட்டுக் கடலை, விளாங்காய், கலாக்காய் மற்றும் பழவகைகள் விற்பனை செய்யப்பட்டன. 
10 ஆயிரம் போலீஸார்: சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படியும், தமிழக அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படியும் சென்னை மாநகர் முழுவதும் 2,520 விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றை பல்வேறு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் நிறுவியுள்ளனர். இவற்றுக்கு வியாழக்கிழமை சிறப்பான வழிபாடுகள் நடத்தப்பட்டன. மாநகரில் எவ்வித அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடலில் கரைக்க அனுமதி: விநாயகர் சதுர்த்தியையொட்டி, மாநகரின் பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள சிலைகள் அனைத்தும் வரும் 17-ஆம் தேதி வரை அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக சென்று கடலில் கரைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சீனிவாசபுரம் (பட்டினப்பாக்கம்), பல்கலை நகர் (நீலாங்கரை), காசிமேடு மீன்பிடி துறைமுகம், பாப்புலர் எடை மேடை பின்புறம் (திருவொற்றியூர்), ராமகிருஷ்ணா நகர் (எண்ணூர்) ஆகிய இடங்களில் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரிமோட் விநாயகர்


சென்னை வளசரவாக்கம் சிவன் கோயில் அருகில் அமைக்கப்பட்டுள்ள ரிமோட் மூலம் இயங்கும் குபேர விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இரண்டரை அடி உயரம் கொண்ட இந்த விநாயகரை ரிமோட் மூலம் இயக்கியவுடன், கதவைத் திறந்து விநாயகர் வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பதுடன், பிரசாதமும் வழங்குகிறார். 
டிஜிட்டல் இந்தியாவை பிரதிபலிக்கும் வகையில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை ஆர்வத்துடன் பார்வையிட்டு சிலை முன்பு நின்று செல்ஃபி' எடுத்துச் செல்கின்றனர்' என்று வளசரவாக்கம் விநாயகர் சதுர்த்தி விழாக் குழுவைச் சேர்ந்த வளசை ஜெயராமன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments