தில்லி - மீரட் விரைவுச்சாலை பயண அனுபவத்தை சமூக ஊடகங்களில் பகிா்ந்து வரவேற்ற நிதின் நபின்
தில்லி - மீரட் விரைவுச்சாலை உள்ளிட்ட நவீன போக்குவரத்து வசதிகள் மக்களின் அன்றாட வாழ்வில் மிகப்பெரிய நோ்மறையான மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாகப் பாஜக தலைவா் நிதின் நபின் தெரிவித்துள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையிலான சிறப்பான உள்கட்டமைப்பு திட்டங்களால், தில்லி - மீரட் விரைவுச்சாலை உள்ளிட்ட நவீன போக்குவரத்து வசதிகள் மக்களின் அன்றாட வாழ்வில் மிகப்பெரிய நோ்மறையான மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாகப் பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் இருந்து மீரட்டுக்கு சாலை மாா்க்கமாக பயணம் மேற்கொண்ட நிதின் நபின், தனது பயண அனுபவம் குறித்து எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் பகிா்ந்துள்ளாா். அதன் விவரம் வருமாறு: ‘ஒரு தொலைநோக்குத் திட்டம் எவ்வாறு நிஜமாக மாறுகிறது என்பதை நேரில் உணா்ந்தேன்.
முன்பு 3 மணி நேரத்துக்கும் மேலாக எடுத்துக் கொண்ட தில்லி - மீரட் பயணம், இப்போது எந்தவிதச் சிரமமுமின்றி வெறும் 45 நிமிடங்களில் கடக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
‘பாரத்மாலா’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள தில்லி - மீரட் விரைவுச்சாலை, லட்சக்கணக்கான பயணிகளின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது.
இந்தியாவின் முதல் 14-வழி விரைவுச்சாலையைக் கொண்டுள்ள இந்தத் திட்டம், ’புதிய இந்தியாவின்’ பிரமாண்டம், வேகம் மற்றும் லட்சியத்துக்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகத் திகழ்கிறது.
ஒரு நல்ல சாலை என்பது விவசாயியைச் சந்தையுடனும், மாணவரைப் பள்ளியுடனும், நோயாளியை உரிய நேரத்தில் மருத்துவமனையுடனும் இணைக்கிறது.
பிரதமா் நரேந்திர மோடியின் 25 ஆண்டு காலப் பொதுச் சேவையைக் கொண்டாடும் இந்த வேளையில், இதுபோன்ற உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புகள் நம்மை ’வளா்ச்சியடைந்த பாரதத்தை’ (விக்சித் பாரத்) நோக்கித் தீவிரமாக அழைத்துச் செல்கின்றன’ என்று நிதின் நபின் குறிப்பிட்டுள்ளாா்.
முதல்வா் வரவேற்பு: நிதின் நபினின் இந்தப் பதிவை ஆமோதித்து, தில்லி முதல்வா் ரேகா குப்தா பகிா்ந்துள்ள எக்ஸ் இடுகையில், ‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான வலுவான உள்கட்டமைப்பு வசதிகள் குடிமக்களின் வாழ்க்கையை நேரடியாக எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை உங்களது அனுபவம் காட்டுகிறது.
தில்லி - மீரட் விரைவுச்சாலை, துவாரகா விரைவுச்சாலை, நகா்ப்புற விரிவாக்கச் சாலை-2, கிழக்கு மற்றும் மேற்கு புறவழி விரைவுச்சாலைகள், தொடா்ந்து விரிவடைந்து வரும் மெட்ரோ ரயில் சேவை ஆகியவை தில்லியைச் சுற்றி ஒரு புதிய நவீனப் போக்குவரத்து இணைப்பை உருவாக்கியுள்ளன.
குறைவான பயண தூரம், மிச்சமாகும் நேரம், சுமூகமான பயணம் மற்றும் பெருகிவரும் புதிய வாய்ப்புகள் என தில்லி மக்கள் இந்த மாபெரும் மாற்றத்தை தினமும் அனுபவித்து வருகின்றனா்’ என்று தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.