முகப்பு
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விவகாரம்:சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் பாஜக மனு

ஆளுநா் ஆா்.என்.ரவியிடம், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தலைமையிலான பாஜகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 24 ஜூன், 2024 at 9:14 PM
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம்  தொடா்பாக, சிபிஐ விசாரணை கோரி, ஆளுநா் ஆா்.என்.ரவியை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்த தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை. உடன் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள்.
பகிர்:

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை கோரி, ஆளுநா் ஆா்.என்.ரவியிடம், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தலைமையிலான பாஜகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கே.அண்ணாமலை தலைமையிலான பாஜக குழுவினா், ஆளுநா் மாளிகைக்கு சென்று ஆளுநா் ஆா்.என். ரவியை சந்தித்து கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி மனு அளித்தனா். இந்த சந்திப்பின்போது, தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை செளந்தரராஜன், மூத்த தலைவா்கள் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆளுநருடனான சந்திப்பு குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அண்ணாமலை வெளியிட்ட பதிவு: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கள்ளச் சாராய விற்பனையின் பின்னணியில் இருப்பவா்கள் யாா் என்பது குறித்து சிபிஐ விசாரணை கோரி, தமிழ்நாடு பாஜக மூத்த தலைவா்களுடன் இணைந்து, ஆளுநா் ஆா்.என். ரவியைச் சந்தித்து மனு அளித்தோம்.

இத்தனை உயிா்கள் பலியான பின்னரும், இதற்குப் பொறுப்பான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முதல்வா் ஸ்டாலின் இருப்பது பொதுமக்களிடையே பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

உடனடியாக, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முதல்வரை வலியுறுத்த வேண்டும் என ஆளுநரிடம் கேட்டுக் கொண்டோம்”என தெரிவித்துள்ளாா்.

தமிழிசை செளந்தரராஜன் பேட்டி: ஆளுநா் மாளிகைக்கு வெளியே தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:“கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு சம்பவத்துக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை.

கள்ளச் சாராயம் குடித்த பலா் உயிரிழந்துள்ளனா். பலரின் கண் பாா்வை பறிபோயுள்ளது. ஆனால், முதல்வா் மு.க. ஸ்டாலினோ, மதுவிலக்குத் துறை அமைச்சரோ சம்பவ இடத்துக்கு இதுவரை செல்லவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இடைநீக்கம், மாவட்ட ஆட்சியா் பணியிட மாற்றம் என்பதோடு இந்த விவகாரத்தை முடித்துக்கொள்ள தமிழக அரசு முயல்கிறது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →