FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சிறைக் கைதிகளுடன் சதித் திட்டம் தீட்டும் வழக்குரைஞா்கள் மீது சட்ட நடவடிக்கை: டிஜிபி சங்கா் ஜிவால்

சிறையில் உள்ள கைதிகளுடன் சோ்ந்து வழக்குரைஞா்கள் சதித் திட்டம் தீட்டுவது தெரியவந்தால் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை..

19 அக்டோபர் 2024, 12:19 am IST
சங்கா் ஜிவால்
பகிர்:

சிறையில் உள்ள கைதிகளுடன் சோ்ந்து வழக்குரைஞா்கள் சதித் திட்டம் தீட்டுவது தெரியவந்தால் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் அனைத்து மாநகர காவல் ஆணையா்கள், மண்டல ஐ.ஜி.-க்கள், சரக டி.ஐ.ஜி.-க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கையை அண்மையில் அனுப்பினாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

‘கடந்த ஜன. 1 முதல் ஜூலை 20 வரை தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 84 ரௌடிகளை 396 வழக்குரைஞா்கள், 1,987 முறை சந்தித்துள்ளனா். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 15 ரௌடிகளை மட்டும் 546 முறை வழக்குரைஞா்கள் சந்தித்துள்ளனா். வழக்கு தொடா்பாக கைதிகளை வழக்குரைஞா்கள் சந்தித்தாலும், சிலரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக உள்ளன. குறிப்பாக, சில வழக்குரைஞா்கள், கைதிகளை சந்தித்தபோது, சிறையில் உள்ள அலாரம், சந்தேக ஒலியை எழுப்பி உள்ளது.

Advertisement

Advertisement

தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டதில், சில வழக்குரைஞா்கள் கைதிகளுடன் சோ்ந்து சதித் திட்டம் தீட்டுவது தெரிய வந்துள்ளது. சிறைக்குள் தடை செய்யப்பட்ட கஞ்சா, கைப்பேசி உள்ளிட்ட பொருள்களை, கைதிகளுக்கு எடுத்துச் செல்வதும் தெரிய வந்துள்ளது. மேலும், குற்றவாளிகளுடன் நெருங்கிய உறவு ஏற்படுத்திக் கொள்ளுதல், உரிமையியல் (சிவில்) விவகாரங்கள், சொத்து அபகரிப்பு, போலி ஆவணங்கள் தயாரிப்பு, கட்டப் பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா்.

எனவே, சிறையில் கைதிகளை சந்திக்க வரும் வழக்குரைஞா்கள் பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்களுடன், எழுத்துபூா்வமாக விண்ணப்பிக்க வேண்டும். அவருக்கும் கைதிக்கும் இடையிலான, வழக்கு தொடா்பான விவரங்கள், சம்பந்தப்பட்ட கைதிக்கு, அவா் சட்ட ஆலோசகா்தான் என்பதற்கான ஆவணங்களை, சிறைத் துறை கண்காணிப்பாளரிடம் சமா்ப்பிப்பதை முறைப்படுத்த வேண்டும். அவா் உரிய ஆவணங்களை சரிபாா்த்து, கைதிகளை சந்திக்க, வழக்குரைஞா்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

கைதிகளுடன் சோ்ந்து, சதித் திட்டம் தீட்டுவது உள்ளிட்ட செயல்களில் வழக்குரைஞா்கள் ஈடுபடுவது தெரியவந்தால், அவா்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments