16% ஜிஎஸ்டிபி வளர்ச்சியுடன் முதலிடத்தில் தமிழ்நாடு! - முதல்வர் பெருமிதம்
தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் உயர்வு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு...
கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான் என முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2024-25-ஆம் நிதியாண்டில் 16 சதவீத பொருளாதார வளா்ச்சியுடன் நாட்டின் வேகமாக வளரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) 2023-24-இல் ரூ.26.89 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ. 31.18 லட்சம் கோடியாக உயா்ந்து 16 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.
Advertisement
Advertisement
இதன்மூலம் தொடா்ச்சியாக மூன்று ஆண்டுகளாக குஜராத், கா்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற தொழில்மயமான மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
இதையும் படிக்க | 16% பொருளாதார வளா்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம்: ஆா்பிஐ தகவல்
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில்,
"வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை!
பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, மத்திய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை! இருந்தும் ஜிஎஸ்டிபி வளர்ச்சியில் 16%-உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் திராவிட மாடல்.
கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான்! சொல்வது நாம் அல்ல, இந்திய ரிசர்வ் வங்கி!
2021-2025 வரையிலான நிதியாண்டுகளில் மட்டுமே 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம்! மொத்த மதிப்பு ரூ. 31.19 லட்சம் கோடி! நம்மோடு ஒப்பிடத்தக்க, வளர்ந்த பெரிய மாநிலங்களான, மகாராஷ்டிரம், கர்நாடகம், குஜராத் போன்றவற்றை விஞ்சிய இந்த வளர்ச்சி விகிதம் – தமிழ்நாட்டுக்கே சொந்தம்!
தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி! 2031-ஆம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்! இது உறுதி!" என்று பதிவிட்டுள்ளார்.
With a 16 percent GSDP growth, Tamil Nadu is number one: MK stalin X post
இதையும் படிக்க | தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம்! - ஆர்.எஸ். பாரதி
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.