எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இன்று (நவ. 26) ராஜிநாமா செய்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இன்று (நவ. 26) ராஜிநாமா செய்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.
எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த ஆலங்குளம் தொகுதி மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்த நிலையில், கோபிசெட்டிப்பாளையத்தின் எம்.எல்.ஏ., பதவியை செங்கோட்டையனும் ராஜிநாமா செய்துள்ளார். இதனால் சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை 63ஆக குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரே தொகுதியில் அதிகம் முறை (8 முறை வென்றார்) போட்டியிட்டு வென்றவர் என்ற பெருமைக்கு உரியவரான செங்கோட்டையன், கொங்கு மண்டலத்தின் வாக்குகளைக் கவருவதில் முக்கிய நபராக அறியப்பட்டு வருகிறார்.
ஓபிஎஸ் - இபிஎஸ் பிரிந்துள்ள நிலையில், கட்சி ஒருங்கிணைப்பு குறித்து பேசியதால் அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நீக்கியிருந்தார்.
இதனால், அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகத் தெரிகிறது.
சட்டப்பேரவைக்குள் நுழைவதற்கு முன்பு, தவெகவில் இணையப்போகிறீர்களா? என செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ''ஒரு நாள் பொறுத்திருங்கள்'' என அவர் பதில் அளித்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜிநாமா செய்துள்ளதால், இனி அவர் எந்தக் கட்சியிலும் இணையலாம். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, பதவியில் இருக்கும்போது வேறு ஒரு கட்சியில் இணையக்கூடாது என்பதால், செங்கோட்டையன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இதன்மூலம் செங்கோட்டையன் வேறு கட்சியில் இணையவுள்ளது உறுதியாகியுள்ளது.
இதையும் படிக்க | முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?