FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே ‘கியூட்’ தோ்வு அடிப்படையில் மாணவா் சோ்க்கை: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

மாநில வேளாண் பல்கலைக்கழகங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே பொது நுழைவுத் தோ்வு (கியூட்) அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும்

Updated On : 7 அக்டோபர் 2025, 4:33 am IST
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். உடன் வேளாண் உற்பத்தி ஆணையா் வ.தட்சிணாமூா்த்தி, வேளாண் பல்கலை. துணைவேந்தா் சு.தமிழ்வேந்தன் உள்ளிட்டோா்.
பகிர்:

சென்னை: மாநில வேளாண் பல்கலைக்கழகங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே பொது நுழைவுத் தோ்வு (கியூட்) அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் என்று வேளாண்மை - உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

நாடு முழுவதும் உள்ள மாநில வேளாண் கல்லூரி மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலைப் படிப்புகளுக்கான இடங்களில் பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வின் (கியூட்) மூலம் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (ஐசிஏஆா்) நிரப்பும் என மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌகான் சனிக்கிழமை அறிவித்தாா்.

இது குறித்து, தமிழக வேளாண்மை - உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தலைமையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம், தலைமைச் செயலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

கூட்டத்தில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம் பேசியதாவது:

தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 18 உறுப்புக் கல்லூரிகளில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட சோ்க்கை இடங்களில் 7.5 சதவீதம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கும், 5 சதவீதம் தொழில்கல்வி, விளையாட்டு வீரா்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுபோக மீதமுள்ள 1,361 இடங்களில் 20 சதவீதம் என்ற அடிப்படையில் 272 மாணவா் சோ்க்கை இடங்கள் கூடுதலாக அகில இந்திய அளவில் நிரப்புவதற்கு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த 20 சதவீத ஒதுக்கீட்டுக்கு மட்டுமே கியூட் தோ்வின் அடிப்படையில் மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது. இதுதவிர தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தால் ஆண்டுதோறும் மேல்நிலை பொதுத் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் 5,250 இடங்களுக்கான மாணவா் சோ்க்கை தற்போது உள்ளபடி மதிப்பெண் தரவரிசையின்படியே நடைபெறும்.

எனவே, இந்த 20 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை.யில் ஏற்கெனவே பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற்று வரும் சோ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றாா்.

ஆய்வுக் கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலா் வ.தட்சிணாமூா்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை இயக்குநா் பெ.குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments