காங்கிரஸில் இணைந்த 5 நாள்களில் ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரனுக்கு சீட்!
பாமக ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரனுக்கு காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது பற்றி...
பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணியின் மகன் ஜி.கே.எம். தமிழ்குமரன், சமீபத்தில் காங்கிரஸில் இணைந்த நிலையில் அவருக்கு பென்னாகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் (ராமதாஸ்) கெளரவத் தலைவராகவும் பென்னாகரம் தொகுதி எம்எல்ஏவாகவும் இருப்பவர் ஜி.கே. மணி. இவர்பென்னாகரம் தொகுதியில் கடந்த 1996, 2001, 2006, 2011, 2021 ஆகிய ஐந்து முறையும், மேட்டூர் தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டிலும் போட்டியிட்டார். இதில், மூன்று முறை வெற்றி பெற்றார்.
இந்நிலையில் பாமக (ராமதாஸ்) இளைஞரணித் தலைவராக இருந்துவந்த தமிழ்குமரன், அண்மையில் திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த மார்ச் 28 ஆம் தேதி தில்லி சென்ற அவர், காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.
Advertisement
Advertisement
அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்னதாகவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. தனது தந்தை ஜி.கே.மணி ஐந்து முறை போட்டியிட்ட தொகுதியும், தனக்கு மிகவும் நெருக்கமான பென்னாகரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே ஜி.கே.எம். தமிழ்குமரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாகக் கூறப்பட்டது.
எனினும் புதிதாக இணைந்தவர்களுக்கு உடனே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவது சந்தேகம்தான் என்றும் கட்சித் தலைமை அதுகுறித்து முடிவெடுக்கும் என்றும் கூறப்பட்ட நிலையில், தமிழ்குமரன் கட்சியில் இணைந்த 5 நாள்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் தமிழ்குமரன் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் உள்ளார்.
ஏற்கெனவே, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் குறித்து எம்.பி. ஜோதிமணி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். வேட்பாளர்கள் பட்டியல் அதிருப்தி காரணமாக, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 28 தொகுதிகளில் 27 தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுரை மேலூருக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
G.K. Mani Son Tamilkumaran Gets a Seat Within 5 Days of Joining Congress
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.