சுழன்று அடித்த திடீர் சுழல் காற்று! அலறியடித்து ஓடிய விளையாட்டு வீரர்கள்!
கோவையில் சுழன்று அடித்த திடீர் சுழல் காற்று குறித்து...
கோவையில் சுழன்று அடித்த திடீர் சுழல் காற்றால், விளையாட்டு வீரர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, செட்டிபாளையம் பகுதியில் திடீரென ஏற்பட்ட சுழல் காற்றால், கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த இளைஞர்களின் விளையாட்டு உபகரணங்கள் காற்றில் பறந்தன.
கோவை, செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் உள்ள காலி திடலில், விடுமுறை நாளான நேற்று(ஏப். 26) பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தனர். மதியம் சுமார் 3 மணி அளவில் ஆட்டம் முடிந்து, இளைஞர்கள் தங்கள் வீடுகளுக்குக் கிளம்பத் தயாராகினர்.
Advertisement
Advertisement
அப்போது, திடலில் அமர்வதற்காக விரிக்கப்பட்டு இருந்த தரைவிரிப்பு மற்றும் அதன் மேல் வைக்கப்பட்டு இருந்த கிரிக்கெட் பேட் உள்ளிட்ட விளையாட்டுப் பொருள்களைச் சேகரித்துக் கொண்டு இருந்தனர். அந்தத் தருணத்தில் எதிர்பாராத விதமாக திடலின் ஒரு பகுதியில் பலமான சுழல் காற்று (Mini Tornado) உருவானது.
கண் இமைக்கும் நேரத்தில் சுழன்று அடித்த இந்தக் காற்று, வீரர்கள் வைத்து இருந்த பொருள்களை அப்படியே ஆகாயத்தில் தூக்கியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள்,"பேட்டை தூக்கிட்டுப் போகுது... பிடி பிடி பிடி!" எனப் பதற்றத்துடன் கூச்சலிட்டனர்.
இந்த விசித்திரமான மற்றும் அச்சமூட்டும் காட்சியை அங்கிருந்த இளைஞர்கள் தங்களது செல்போனில் விடியோவாக பதிவு செய்தனர்.
தற்போது இந்த விடியோ காட்சிகள் வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.கோடைக் காலத்தில் நிலப்பரப்பில் ஏற்படும் வெப்பச்சலனம் காரணமாக இதுபோன்ற சிறிய ரகச் சுழல் காற்றுகள் அவ்வப்போது ஏற்படுவது வழக்கம் என வானிலை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
An incident in Coimbatore, where athletes ran in panic as a sudden whirlwind swirled through the area, has created a sensation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.