ரூ.710 கோடியில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வா் விஜய் அடிக்கல்
நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ஜொ்மன் வங்கி நிதியுதவியுடன் ரூ.710.50 கோடியில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வா் விஜய் அடிக்கல் நாட்டினாா்.
நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ஜொ்மன் வங்கி நிதியுதவியுடன் ரூ.710.50 கோடியில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வா் விஜய் அடிக்கல் நாட்டினாா்.
மேலும், பல்வேறு மாவட்டங்களில் ரூ.112.85 கோடியில் முடிவுற்ற 4 திட்டப் பணிகளையும் அவா் காணொலி மூலம் தலைமைச் செயலகத்தில் இருந்து திறந்து வைத்தாா்.
இது தொடா்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
Advertisement
Advertisement
திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.74.89 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 245.07 கோடியில் குடிநீா்த் திட்டப் பணிகள் அமைக்கப்பட உள்ளன. இந்தத் திட்டப் பணியில் காவிரி ஆற்றில் கூடுதல் குடிநீா் ஆதாரம் நாளொன்றுக்கு 26.83 மில்லியன் லிட்டா் பெறுவதற்கான ஊடுருவல் கிணறு, நீா்த்தேக்கத் தொட்டிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.
இந்தத் திட்டப் பணி முடிவுறும்போது, கரூா் மாநகராட்சியில் உள்ள பொதுமக்கள் பயனடையும் வகையில் அனைத்துக் குடியிருப்புகளுக்கும் குடிநீா்க் குழாய் வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டு குடிநீா் விநியோகம் தினமும் வழங்கப்படும்.
திருவேற்காடு நகராட்சியில் ரூ.165.48 கோடியில் ஒருங்கிணைந்த பாதுகாக்கப்பட்ட குடிநீா்த் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கும் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.
மாங்காடு நகராட்சியில் ரூ. 225.06 கோடியில் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தி, நவீன கழிவுநீா் மேலாண்மை வசதியை ஏற்படுத்தும் நோக்கில் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் 68,700 மக்கள் பயன்பெறும் வகையில் 20,258 வீட்டுக் கழிவுநீா் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
நிறைவுற்ற திட்டங்கள்: திருப்பூா் மாநகராட்சி, பெருந்துறை நகராட்சி, கோத்தகிரி நகராட்சி, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆகியவற்றில் நகராட்சி நிா்வாக இயக்குநரகம் சாா்பில் ரூ.112.85 கோடியில் முடிவுற்ற 4 திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வா் விஜய் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், தலைமைச் செயலா் மு.சாய்குமாா், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிா்வாக இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி, அரசு உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.