பட்ஜெட் 2026! மண்ணின் மகள் திட்டத்தில் முத்திரைத்தாள் வரி, பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு!
மண்ணின் மகள் திட்டத்தில் முத்திரைத்தாள் வரி, பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படவுள்ளது தொடர்பாக...
தமிழக பட்ஜெட் 2026-ஆம் ஆண்டில், சமூக நீதித்துறையில், முத்திரைத்தாள் வரி, பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கும் மண்ணின் மகள் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் என். மரிய வில்சன் இன்று(ஆக. 5) தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அவர் சமூகநீதித் துறைக்கு வெளியிட்ட அறிவிப்பில்,
Advertisement
Advertisement
”ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன், மண்ணின் மகள்' திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு விவசாயம் செய்திடத் தேவையான நவீன தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும். திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்கு ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
நகர்ப்புர மற்றும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புகளில், அவர்களின் முழுமையான சமூகப் பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும் எனும் நோக்கத்தில், அயோத்திதாசப் பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை உள்கட்டமைப்புகளை விரிவாக மேம்படுத்துவதிலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும், இத்திட்டம் முழுமையாக கவனம் செலுத்தும். திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்கு ரூ. 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பழங்குடியினர் குடியிருப்புகளில் வீடுகள், சாலைகள், குடிநீர், தெரு விளக்குகள், வாழ்வாதாரத் திட்டங்கள், சுகாதாரக் கட்டமைப்புகள், கல்வி நலன் சார்ந்த உதவித்தொகைத் திட்டங்கள், பள்ளி மற்றும் விடுதி மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதி மேம்படுத்தும் நோக்கில், ஆன்றோர் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டில் ரூ. 250 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், பழங்குடியினர் குடியிருப்புகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
ஆதிதிராவிடர்களுக்கான சிறப்புக் கூறுகள் திட்டத்தின் கீழ் ரூ. 25,225 கோடியும், பழங்குடியினருக்கான துணைத் திட்டத்தின் கீழ் ரூ. 2,079 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சமூகநீதித் துறைக்கு ரூ. 3,937 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முத்திரைத்தாள் வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படும்” என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
It has been announced that the 'Mannin Magal' scheme, which provides a full exemption from stamp duty and registration fees, will be implemented in the social justice sector under the Tamil Nadu budget for the year 2026.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.