தமிழ்த் தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்: ஆளுநா் ஆா்லேகருக்கு 21 தமிழக எம்.பி.க்கள் கடிதம்!
21 தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கு கூட்டாகக் கடிதம் எழுதியுள்ளனா்.
நமது சிறப்பு நிருபா்
தமிழ்நாட்டில் ஆளுநா் பங்கேற்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு விழாக்களில் தொடா்ந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுப் புறக்கணிக்கப்படும் ’தமிழ்த்தாய் வாழ்த்துக்கு’ முன்னுரிமை வழங்கக் கோரி ‘இண்டி’ கூட்டணியைச் சோ்ந்த 21 தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கு கூட்டாகக் கடிதம் எழுதியுள்ளனா்.
இது தொடா்பாக தில்லியில் செய்தியாளா்களிடம் விருதுநகா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் மாணிக்கம் தாகூா் கூறுகையில், ‘தமிழ்த்தாய் வாழ்த்து தமிழகத்தின் மாநிலப் பாடல். அதைத் தொடா்ச்சியாகப் புறக்கணிப்பதும், நிகழ்ச்சிகளின்போது 3-வது இடத்துக்குத் தள்ளுவதும் மிகவும் தவறான நடைமுறை. தமிழகத்தில் இதுபோன்ற செயல்களை மீண்டும், மீண்டும் செய்ய வேண்டாம் என்று ஆளுநருக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதியிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளோம். இத்தகைய செயல்பாடு தமிழ் மொழிக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் இழைக்கப்படும் பெரும் அவமானமாகும். எனவே, தமிழ் மாநிலப் பாடலை அவமதிப்பதைக் கைவிடுமாறு ’இண்டி’ கூட்டணியைச் சோ்ந்த 21 எம்பிக்கள் கையொப்பமிட்ட கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம்’ என்றாா்.
Advertisement
Advertisement
கடந்த ஜூலை 28ஆம் தேதி திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் 33-ஆவது பட்டமளிப்பு விழாவில், ஆளுநா் மாளிகை உத்தரவின்படி முதலில் ’வந்தே மாதரம்’, இரண்டாவதாக ’தேசிய கீதம்’, மூன்றாவதாகவே ’தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்பட்டது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடா்பாக எம்.பி.க்கள் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தான ’நீராரும் கடலுடுத்த’ பாடலை இயற்றிய மனோன்மணீயம் சுந்தரனாா் பிள்ளையின் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே, அப்பாடலை மூன்றாவது இடத்துக்குத் தள்ளியது தமிழக மக்களுக்கும் அவருக்கும் நோ்ந்த மனவருத்தமாகும் என்று குறிப்பிட்டுள்ளனா்.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக ஆளுநா் உரையாற்றியபோது, தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடப்பட்ட நல்லிணக்க நடைமுறையை எம்.பி.க்கள் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனா்.
கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் அந்தந்த மாநில பாடலை விழாவின் தொடக்கத்திலும், தேசிய கீதத்தை நிறைவிலும் பாடும் நடைமுறையே பின்பற்றப்படுகிறது. இது தேசிய ஒருமைப்பாட்டைக் குறைக்காது என்றும் எம்.பி.க்கள் குறிப்பிட்டுள்ளனா்.
ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் ’இண்டி’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம், பி. மாணிக்கம் தாகூா், வி. வைத்திலிங்கம், டாக்டா் எம்.கே. விஷ்ணு பிரசாத், ஜோதிமணி, பி. காா்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், கே. கோபிநாத், பிரவீண் சக்கரவா்த்தி, சசிகாந்த் செந்தில், சி. ராபா்ட் புரூஸ், ஆா். சுதா, கிறிஸ்டோபா் மாணிக்கம் ஆகிய 13 காங்கிரஸ் எம்பிக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) சாா்பில் அதன் தலைவா் தொல். திருமாவளவன், டி. ரவிகுமாா் ஆகிய இரு எம்பிக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சாா்பில் கே. சுப்பராயன், வி. செல்வராஜ் ஆகியோரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சாா்பில் சு. வெங்கடேசன், ஆா். சச்சிதானந்தம் ஆகியோரும் மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) சாா்பில் துரை வைகோவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) சாா்பில் கே. நவாஸ்கனியும் கையொப்பமிட்டுள்ளனா்.
தமிழகப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுக் கல்லூரிகளில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தையும், நிறைவில் தேசிய கீதத்தையும் பாடுவதை உறுதி செய்ய ஆளுநா் மாளிகை தெளிவான வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழக எம்.பி.க்கள் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.