ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மறுத்த பரிசல் ஓட்டிகள்! ஏன்?
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு அனுமதித்தும் அவற்றை இயக்க பரிசல் ஓட்டிகள் மறுப்பதற்கான காரணம் பற்றி...
பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்துள்ளதால், 4 நாள்களுக்குப் பிறகு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த போதிலும், அருவியில் நீரின் எதிர்ப்பு விசை அதிகரிப்பு காரணமாக பரிசல்கள் இயக்க பரிசல் ஓட்டிகள் முன்வராததால் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த பருவமழை குறைந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் வரத்து சுமார் 9,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
நீர்வரத்து குறைந்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 9,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, சனிக்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 6,000 கன அடியாக சரிந்து தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து வந்து கொண்டிருக்கிறது.
Advertisement
Advertisement
காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்துள்ளதால் ஒகேனக்கலில் நான்கு நாள்களுக்குப் பிறகு பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
காவிரி ஆற்றில் மாமரத்துக்கடவு பரிசல் துறையிலிருந்து தொம்பச்சிக்கல் வழியாக மணல்மேடு வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அருவிகளில் நீர்வரத்து மாறால் நீர் விசையின் எதிர்ப்பு காரணமாக மணல்மேடு பகுதியில் இருந்து மீண்டும் தொம்பச்சிக்கல் பகுதிக்கு பரிசல் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒகேனக்கலில் பரிசல் இயக்குவதற்கு முன்வரவில்லை என பரிசல் ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இதனால் ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மாமரத்து பரிசல் துறையில் இருந்து காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ள முடியாமல் காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
பரிசல் இயக்குவது குறித்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 6000 கன அடியாக சரிந்த போதிலும் அருவிகளில் விழும் நீரின் எதிர்ப்பு விசை காரணமாக பரிசல் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டதாக பரிசல் ஓட்டிகள் தெரிவித்து இருந்தனர். அதன் பேரில் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நீலமேகம், சுருளிநாதன், தீயணைப்பு துறை வீரர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மாமரத்து கடவு பரிசல் துறையிலிருந்து தொம்பச்சிக்கல் பகுதிக்கு பரிசலில் சென்று, தொம்பச்சிக்கல் படிக்கட்டு பகுதியில் பரிசல் நிறுத்துவதற்கும், சுற்றுலாப் பயணிகளை இடையூறு இன்றி, நீர் விசைக்கு ஏற்றவாறு பரிசலை நிறுத்தி ஏற்றுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்விற்குப் பிறகு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவது குறித்து மேற்கொண்ட ஆய்வின் அறிக்கைகளை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைப்பதாகவும், அறிக்கையின் அடிப்படையில் அனுமதி குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறினர்.
Coracle operators at Hogenakkal refused to operate coracles on the Cauvery River
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.