முதல்வர் விஜய் இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்: காரணம் என்ன?
முதல்வர் விஜய் இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள் குறித்து....
தொகுதி மறுவரையறை மசோதா குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் இன்று தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் அதிமுக, திமுக பங்கேற்காது என அந்த கட்சிகளின் தலைமை அறிவித்துள்ளது. இதேபோன்று தேமுதிக, பாமக, மநீம-வும் பங்கேற்காது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீடு அமலாக்க மசோதாவை மீண்டும் கொண்டுவரவும், வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதாவை விவாதித்து நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு முதல்வர் ஜோசப் விஜய் அழைப்பு விடுத்திருந்தார்.
Advertisement
Advertisement
தொகுதி மறுவரையறை மசோதா குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ் தில்லி தமிழ்நாடு இல்லத்தின் மூலம் அனைத்துக் கட்சி மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் பேசுகையில், தமிழ்நாட்டில் முக்கிய பிரச்னை ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தென் மாநிலங்களுக்கான பிரச்னை. அதற்காகத்தான் சனிக்கிழமை (ஆக. 8) அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்துக்கு முதல்வா் ஏற்பாடு செய்துள்ளாா். இந்தக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் கலந்து கொள்வாா்களா? இல்லையா?. இதற்கு எதிா்க்கட்சித் தலைவா் பதில் அளிக்க வேண்டும் என்றார்.
இதற்கு தொகுதி மறுசீரமைப்பு மசோதா பற்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முன்மாதிரியாக, முதல்முதலாக அந்த பிரச்னையை பற்றி பேசியது திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்தான். கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 5 முதல்வா்களையும் சென்னைக்கு வரவழைத்து, ஓா் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, இந்த பிரச்னைக்கு எதிராக நாட்டிலேயே முதல் குரல் கொடுத்தவா் மு.க.ஸ்டாலின். முதல்வா் கூட்டிய அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்குமா என்பதை ஆலோசனை நடத்தி சரியான முடிவை திமுக தலைவா் எடுப்பாா் என பதிலளித்தார்.
தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது
மேக்கேதாட்டு அணை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகிறார்கள். அனைவரும் கேட்கும் அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தாமல், அதுகுறித்து வாயும் திறக்காமல் தவெக அரசு கள்ள மவுனம் காக்கிறது. யாரும் கேட்காமலேயே அவசர அவசரமாகத் தொகுதி மறுவரையறைக்கான கலந்தாய்வுக் கூட்டத்தைத் தவெக அரசு தற்போது கூட்டியிருப்பது காவிரி பிரச்சினையில் இருந்து மக்களைத் திசைதிருப்பும் அரசியல் நாடகமேயன்றி வேறில்லை.
தொகுதி மறுவரையறைக் கலந்தாய்வுக் கூட்டத்தில் திமுக பங்கேற்க வேண்டுமென்றால் அதற்கு முன்பாக தமிழ்நாட்டின் உயிர்ப்பிரச்சினையான மேக்கேதாட்டு அணை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என நிபந்தனை விதித்து திமுக பொதுச் செயலாளர் வெள்ளிக்கிழமை திமுகவின் நிலைப்பாட்டை அறிக்கை வாயிலாகத் தெளிவுபடுத்திவிட்டார். எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள தவெக அரசின் இன்றைய கூட்டத்தில் திமுக பங்கேற்காது என திமுக துணைப் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
அதிமுக புறக்கணிப்பு
தொகுதி மறுவரையறைக்கான தமிழக எம்.பிக்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் அதிமுகவும் பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக உறுப்பினர்களான தம்பிதுரை, இன்பதுரை உள்ளிட்டோர் தில்லியில் உள்ளதால் பங்கேற்காது என கூறப்படுகிறது.
பாமக புறக்கணிப்பு
காங்கிரஸ் கட்சி தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து திமுகவின் நிலைப்பாட்டை தெரிந்துகொள்ளவே இந்தக் கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெறவுள்ளது. இது எங்களின் கருத்து மட்டுமல்ல. பொது அரசியல் தெரிந்தவர்களின் கருத்து. சட்டப்போராட்டங்கள் தொடர்பாக எங்களது கருத்துகளைக் கேட்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ள நிலையில், பாமகவும் பங்கேற்காது என தெரிகிறது.
தேமுதிக, மநீம நிலைபாடு என்ன?
இதேபோன்று முதல்வர் விஜய் தலைமையில் இன்று நடைபெறும் தொகுதி மறுவரையறைக்கான தமிழக எம்.பிக்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் தேமுதிக பங்கேற்காது என கூறப்பட்டுள்ளது. மக்கள நீதி மய்யத்தின் மாநிலங்களவை உறுப்பினரான கமல்ஹாசன் அமெரிக்காவில் இருப்பதால் அவரும் பங்கேற்கமாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.
புறக்கணிப்பு 37, பங்கேற்பு 20
இந்த நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, மநீம உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்காது என அந்தந்த கட்சியின் தலைமைகள் அறிவித்துள்ள நிலையில், மொத்தம் உள்ள 57 நாடாளுமன்ற உறுப்பினர்களில் காங்கிரஸ் 12, விசிக 2, சிபிஐ - 2, சிபிஎம் 2, மதிமுக 1, ஐயுஎம்எல் 1 என மொத்தம் 20 உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க இருப்பதாகவும், திமுக 30, அதிமுக 4, பாமக 1, மநீம 1, தேமுதிக 1 என மொத்தம் 37 உறுப்பினர்கள் புறக்கணிப்பதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதற்கு காரணம் என்ன?
ஒரு அனைத்துக்கட்சி கூட்டம் என்றால் முறைப்படி கட்சிகளின் தலைமைக்குதான் அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால், தவெக அரசு கட்சிகளின் தலைமைக்கு தெரிவிக்காமல், அந்த கட்சியின் உறுப்பினர்களுக்கு தில்லி தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தனியாக அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், காவிரியில் தண்ணீர் திறந்துவிட கோரி தமிழ்நாடு முழுவதும் தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காவிரி, மேக்கேதாட்டு அணை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகிறது. அனைவரும் கேட்கும் அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தாமல், அதுகுறித்து வாய் திறக்காமல் மவுனம் காக்கும் தவெக அரசு, சம்மந்தமே இல்லாமல் கூட்டியுள்ள தொகுதி மறுவரையறைக் கலந்தாய்வுக் கூட்டத்தில் ஏன் பங்கேற்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசியல் நாடகம்
காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பு, மேக்கேதாட்டுவில் தடுப்பு அணை விவகாரத்தில் ஆதரவு மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்தை கேட்காமல் பெங்களூரு செல்ல திட்டமிட்டு தடைப்பட்டு போனது. இப்போது கட்சியின் தலைமைகளுக்கு முறையான அழைப்பு விடுக்காமல் கூட்டப்படும் இந்த கூட்டமும் முதல்வர் விஜய்க்கு பின்னடவைதான் அளிக்கும் என்றும் இதுவெல்லாம் தமிழக மக்களைத் திசைதிருப்பும் அரசியல் நாடகம் என அரசியல் விமர்சகர்கள் கூறுக்கின்றனர்.
Opposition parties to boycott the meeting of Tamil Nadu MPs convened by Chief Minister Vijay today
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.