சில்லறைக் கடைகளில் ஆவின் பால் விநியோகம் முற்றிலும் நிறுத்தம்! பொது மக்கள் அவதி!
சில்லறைக் கடைகளில் ஆவின் பால் விநியோகம் முற்றிலும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...
சில்லறைக் கடைகளில் ஆவின் பால் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் உள்பட பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை சாலையில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள உற்பத்தியாளர்களிடம் பால் சேகரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட முகவர்கள் ஆவின் பால் மற்றும் பால் உபபொருள்களை விற்பனை செய்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில், ஆவின் முகவர்களுக்கு விற்பனைக்காக வழங்கப்படும் பால் பாக்கெட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கடைகள் வைத்து ஆவின் பால் விற்பனை செய்வோரால், பொதுமக்களுக்கு போதிய அளவு பாலை விற்பனை செய்ய முடிவதில்லை.
தேவையான அளவுக்கு, பால் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். அதேபோல, பால் டிப்போவில் சென்று ஆவின் பால் வாங்குவதற்கு புதிய அட்டை பதிவு செய்யுமாறு கேட்டால், தற்போது புதிய அட்டை பதிவு செய்வதில்லை என பொதுமக்களிடம் ஆவின் பால் அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், டிப்போ இல்லாத தனியார் சில்லறைக் கடைகளில் ஆவின் விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தனியார் பாலை அதிகளவில் வாங்கி உபயோகப்படுத்துகிறார்கள். ஆவின் பால் ஒரு லிட்டர் ரூ. 48க்கு விற்பனை செய்யப்படுகிறது. தனியார் பால் பாக்கெட் ஒரு லிட்டர் ரூ. 65 முதல் ரூ. 74 வரை விற்பனையாகிறது. ஆவின் பால் தட்டுப்பாடு காரணமாக, பொதுமக்கள் தனியார் நிறுவன பாலை வாங்கி பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
சில்லறைக் கடைகளில் ஆவின் பால் விற்பனைக்கு வருவதில்லை. இதனால், அரசுக்கு லட்சக்கணக்கில் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் ஆவின் பாலை மட்டுமே நம்பியுள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் ஆவின் பால் இல்லாமல் பொதுமக்களும் நோயாளிகளும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்கள், உரிய தொகை கிடைக்காததால் பால் வழங்குவதில்லை என்றும், இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
The complete halt in the supply of Aavin milk to retail outlets has caused hardship to the public, including children undergoing treatment in hospitals.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.