மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி முதல்வர் விஜய் கடிதம்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகை மீட்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஆக. 13) கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ஆக. 12 அன்று இரவு, IND-TN-10-MM-329 என்ற பதிவு எண்ணைக் கொண்ட மீன்பிடி இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்த சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் தனிப்பட்ட கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாக தமிழ்நாடு முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதேபோன்று இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதல்வர், மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, மீனவ சமூகத்தினரிடையே, குறிப்பாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில், மிகுந்த கவலையையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி வருவதாகவும், நாளதுவரையில் 49 இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
எனவே, தகுந்த தூதரக நடவடிக்கைகள் வாயிலாக இலங்கை அரசிடம் இக்கோரிக்கையை முன்வைத்து, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் விரைவாக விடுவித்து, பாதுகாப்பாகத் தாய்நாடு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை தமிழ்நாடு முதல்வர் அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கும், தமிழ்நாட்டு மீனவ சமூகத்தினருக்கும் இவ்விவகாரத்தில் பெரும் நம்பிக்கையையும் நிம்மதியையும் அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இப்பொருண்மை குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் உடனடித் தலையீட்டைத் தான் எதிர்நோக்குவதாகவும் தமிழ்நாடு முதல்வர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Chief Minister C. Joseph Vijay wrote a letter to Union External Affairs Minister Jaishankar today (August 13), urging him to take the necessary steps to secure the release of nine fishermen from Ramanathapuram district who have been arrested by the Sri Lankan Navy, and to retrieve their fishing boat.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.