ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கோலாகலம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கோலாகலமாக இன்று நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் இன்று காலை 8.45 மணிக்கு தேரோட்டம் வெகு விமரிசையாகத் தொடங்கியது. கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து நான்கு ரதவீதிகள் வழியாக தேர் இழுத்தனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் வராக ஷேத்திரம் என அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் கருடாழ்வார் அம்சமான பெரியாழ்வார், பூதேவி அம்சமான ஆண்டாள் அவதரித்த சிறப்புக்குரியது. 196 அடி உயரம் உள்ள ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ராஜகோபுரம் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்குகிறது.
112 அடி உயரம் கொண்ட மகாபாரத, ராமாயண சிற்பங்கள் நிறைந்த கலைப் பெட்டகமான திருஆடிப்பூர தேர் தமிழகத்தில் இரண்டாவது பெரிய தேர் ஆகும். ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூர தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்ட திருவிழா ஆகஸ்ட் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Advertisement
Advertisement
முதல் நாள் விழாவில் 16 வண்டி சப்பரம், 4- ம் நாளில் கோவர்த்தன கிரி கிருஷ்ணர் அலங்காரம், 5-ம் நாளில் பெரியாழ்வார் மங்களாசாசனம் மற்றும் 5 கருட சேவை, 7-ம் நாள் விழாவில் சயன சேவை என தினசரி பல்வேறு உற்சவங்கள் நடைபெற்றது. 8-ம் நாள் விழாவான நேற்று இரவு ரெங்கமன்னார் தங்க குதிரை வாகனத்திலும், ஆண்டாள் பூப் பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இன்று காலை 5 மணிக்கு ஆண்டாள் ரெங்கமன்னார் ஏகாந்த திருமஞ்சனம் முடிந்து, சர்வ அலங்காரத்தில் ஆடிப்பூரத் தேரில் எழுந்தருளினர். அங்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், மதுரை அழகர் கோயில் சுந்தர்ராஜ பெருமாள் சீர்வரிசையாக அனுப்பி வைத்த பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்களப் பொருள்கள் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு அணிவிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி, கீர்த்தனா, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
கீழ ரதவீதியில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா, கோபாலா" கோஷம் முழங்க வடம் பிடித்து நான்கு ரதவீதிகள் வழியாக தேர் இழுத்தனர்.
இதில் எம்.எல்.ஏக்கள் கார்த்தி, செல்வம், சார் ஆட்சியர் முகமது இர்பான், அறநிலையத் துறை உதவி ஆணையர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்தனர்.
Grand celebration of the Aadi Pooram Chariot Festival at the Srivilliputhur Andal Temple
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.