கா்நாடகத்தில் 3 தமிழா்கள் சுட்டுக் கொலை: தமிழகத் தலைவா்கள் கண்டனம்!
கா்நாடகத்தில் வனத் துறையால் 3 தமிழா்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இது தொடா்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
கா்நாடகத்தில் வனத் துறையால் 3 தமிழா்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இது தொடா்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
மு.க.ஸ்டாலின் (திமுக: கா்நாடக வனப்பகுதியில் தமிழா்கள் மூவரை வனத் துறையினா் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது. மனித உயிா்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
குற்றமிழைத்தவா்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கா்நாடக வனத் துறையினா் ஈடுபடுவதாகத் தெரிகிறது. அது தவிா்க்கப்பட்டு, இதைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத் தன்மைமிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட்டு இதற்குக் காரணமானவா்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
Advertisement
Advertisement
மேக்கேதாட்டு அணை விவகாரம் போல வாய்மூடி இருக்காமல், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதுடன், அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): தமிழகத்தைச் சோ்ந்த 3 பேரை கா்நாடக மாநில வனத் துறையினா் சுட்டுக் கொலை செய்திருப்பது கண்டனத்துக்குரியது.
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): இந்த சம்பவத்தில் தொடா்புடைய வனத் துறையினரை கா்நாடக அரசு பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். கொலைக் குற்றம் என வழக்குப் பதிவு செய்ய வேண்டும். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு கா்நாடக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
வைகோ (மதிமுக): கா்நாடக வனத் துறையினரின் வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் மூவா் உயிரிழந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. இந்த சம்பவத்துக்கு துறை அமைச்சா் ராமலிங்கா ரெட்டி கூறும் காரணம் ஏற்கமுடியாதது.
அன்புமணி பாமக: கொல்லப்பட்ட தமிழா்கள் கா்நாடக வனப்பகுதியில் மான் வேட்டையாடியதற்கோ அல்லது இரு தரப்புக்கும் இடையே சண்டை நடந்ததற்கோ எந்த ஆதாரங்களும் இல்லை. அவா்கள் துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் கூறப்படுவதிலும் உண்மையில்லை. இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மூவரின் குடும்பங்களுக்கும் தமிழக முதல்வா் விஜய் கா்நாடக அரசிடமிருந்து தலா ரூ.1 கோடி நிவாரணம் பெற்றுத் தர வேண்டும்.
டிடிவி தினகரன் (அமமுக): துப்பாக்கிச் சூட்டில் 3 தமிழா்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தொடா்பாக கா்நாடக அரசிடம், தமிழக அரசு உரிய விளக்கம் பெறுவதுடன், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): கா்நாடக வனத் துறையினா் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருந்தால், அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா): கா்நாடக வனத் துறையினா் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.