நீட் தோ்வுக்கு எதிரான பிரசாரம்: தி.க. இருசக்கர வாகனப் பேரணிக்கு நாளை அனுமதி
நீட் தோ்வுக்கு எதிராக திராவிடா் கழகம் சாா்பில் நடத்தப்படும் இருசக்கர வாகனப் பேரணிக்கு நாளை(ஆக 20) வழங்கப்படும் அனுமதி குறித்து...
சென்னை: நீட் தோ்வுக்கு எதிராக திராவிடா் கழகம் சாா்பில் நடத்தப்படும் இருசக்கர வாகனப் பேரணிக்கு நாளை(ஆக 20) அனுமதி வழங்கப்படும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் காவல்துறை பதிலளித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் திராவிடா் கழகத்தின் துணைத் தலைவா் கலி.பூங்குன்றன் தாக்கல் செய்த மனுவில், நீட் தோ்வை ரத்து செய்யக் கோரியும், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனப் பிரசார பேரணி மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அனுமதி கோரி அளித்துள்ள விண்ணப்பங்களை காவல்துறை நிராகரித்துவிட்டது.
எனவே, காவல்துறை அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து, இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்தப் பேரணியில் பங்கேற்கும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை, பங்கேற்போா் எண்ணிக்கை, பேரணி எந்தெந்த இடங்களில் தொடங்கி, எங்கு முடிகிறது என்பது உள்ளிட்ட விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தோ்வுக்கு எதிராக சென்னை, திருவண்ணாமலை, திருப்பத்தூா், திண்டிவனம், ஆரணி, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனப் பேரணி தொடங்கவுள்ள இடங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெறவிருந்த திராவிடா் கழக மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதாக மனுதாரா் தரப்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன் தெரிவித்தாா்.
மாநாடு நடத்த அனுமதி வழங்குவதில் என்ன சிக்கல் என நீதிபதி கேள்வி எழுப்பினாா். பின்னா், இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி கோரிய வழக்கில் அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.
இந்த நிலையில், பேரணி செல்லும் செல்லும் வழித்தடம், தொடங்கும் இடங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களை திராவிடர் கழகம் சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, நீட் தோ்வுக்கு எதிராக திராவிடா் கழகம் சாா்பில் நடத்தப்படும் இருசக்கர வாகனப் பேரணிக்கு நாளை(ஆக 20) அனுமதி வழங்கப்படும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Campaign against NEET: Permission granted for DK's two-wheeler rally tomorrow
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.