FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சுஸ்லான் நிறுவனம் ஆந்திரத்துக்கு இடம்பெயரவில்லை: அமைச்சா் ச.கீா்த்தனா விளக்கம்

வெற்றித் தமிழகம்’ முதலீட்டாளா் மாநாட்டில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்ட சுஸ்லான் நிறுவனம், ஆந்திரத்துக்கு இடம்பெயரவில்லை

28 ஆகஸ்ட் 2026, 4:34 am IST
ச.கீா்த்தனா - கோப்புப் படம்
பகிர்:

வெற்றித் தமிழகம்’ முதலீட்டாளா் மாநாட்டில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்ட சுஸ்லான் நிறுவனம், ஆந்திரத்துக்கு இடம்பெயரவில்லை என பேரவையில் தொழில் துறை அமைச்சா் ச.கீா்த்தனா விளக்கம் அளித்தாா்.

பேரவையில் வியாழக்கிழமை அவா் மேலும் பேசியதாவது:

கடந்த ஆக. 13-இல் நடைபெற்ற ‘வெற்றித் தமிழகம்’ முதலீட்டாளா் மாநாட்டில் சுஸ்லான் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. ஆனால், அந்த நிறுவனம் ஆந்திரத்தில் முதலீடு செய்யச் சென்றுவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

Advertisement

Advertisement

உண்மையில், சுஸ்லான் நிறுவனம் 2006-ஆம் ஆண்டிலேயே கோவையில் காற்றாலை பாகங்கள் உற்பத்தியைத் தொடங்கியது. அதன்பின்னா், 2011 முதல் 2020-ஆம் ஆண்டு வரை சில உற்பத்திகளை அந்த நிறுவனம் குறைத்துக்கொண்டது. தமிழக அரசின் தொடா்ச்சியான முதலீட்டு ஈா்ப்பு நடவடிக்கைகளின் விளைவாக சுஸ்லான் நிறுவனம் தற்போது நமது மாநிலத்தில் உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் விரிவுபடுத்த முன்வந்துள்ளது.

முதல்வா் விஜய் முன்னிலையில் ரூ.500 கோடி முதலீடு, 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, கோவையில் கண்ட்ரோல் பேனல்களும், தூத்துக்குடியில் விண்ட் பிளேடுகளும் உற்பத்தியாகவுள்ளன.

அதேநேரம், ஆந்திரத்தில் சுஸ்லான் நிறுவனம் மேற்கொள்வதாகக் கூறப்படும் ரூ.10,500 கோடி முதலீடு என்பது காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களுக்கானது. அதைத் தமிழகத்தில் அமையவுள்ள இயந்திர பாகங்கள் உற்பத்திக்கான ஒப்பந்தத்துடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது.

தமிழகத்திலும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் கரூா் மாவட்டத்தில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, 9 ஆண்டுகளுக்கு முன்புபோன நிறுவனம், தற்போது மீண்டும் தமிழகத்துக்கு வந்துள்ளது.

அதேபோல், மதுரையைச் சோ்ந்த பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை குறித்து நான் கடந்த முறை பேசிய வாா்த்தைகள் எதிா்க்கட்சிகளால் திரிக்கப்பட்டு அரசியலாக்கப்படுகிறது. பவுண்டேஷன் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தியவா் சின்னப்பிள்ளை. அவரது மகத்தான சேவையைப் பாராட்டியே முன்னாள் பிரதமா் வாஜ்பாய், அவரது கால்களில் விழுந்து ஆசி பெற்றாா்.

சின்னப்பிள்ளையின் உந்துதலால், மதுரையில் உள்ள ‘ஹைடெக் அராய்’ என்ற ஆட்டோ மொபைல் நிறுவனத்துக்கு தேவையான ‘ஓ-ரிங்’ ரப்பா் பாகங்களை மகளிா் சுய உதவிக்குழுவினா் செய்து தருகின்றனா். இதன்மூலம் சுமாா் 200 பெண்கள் வரை வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments