ஊத்துக்கோட்டை அருகே பெண் முகத்தில் அமிலம் ஊற்றி கொடூர கொலை!
ஊத்துக்கோட்டை அருகே பெண் முகத்தில் அமிலம் ஊற்றி கொடூரமாக கொலை செய்யப்பட்டது பற்றி...
திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே பெண் முகத்தில் அமிலம் ஊற்றி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம், தொட்டாரெட்டிகுப்பம் கிராமப் பகுதியில் உள்ள வெள்ளக்குளம் ஏரிக்கரையோரம் அப்பகுதி இளைஞர்கள் இன்று காலையில் இயற்கை உபாதைக்காக சென்றனர்.
அப்போது அங்குள்ள வயல்வெளியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
Advertisement
Advertisement
அதைத் தொடர்ந்து ஊதுக்கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே, ஊத்துக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் தேவராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கிடந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் அருகே கைப்பேசி ஒன்று கிடந்தது. அதை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்தனர்.
இதில், படுகொலை செய்யப்பட்ட பெண் ஆந்திர மாநிலம், நாகலாபுரம் நின்றை மண்டலம், சவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருணா (40) என்பது தெரிய வந்தது.
மேலும், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை அருகே உள்ள வதட்டூர் கண்டிகை கிராமத்திற்கு வியாழக்கிழமை உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை கழுத்தை நெரித்தும், முகத்தில் அமிலம் ஊற்றியும் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். மேலும் இவரது கழுத்தில் தாலி மற்றும் கம்மல் உள்ளிட்டவை அப்படியே உள்ளது. இதனால் கொலைச் சம்பவம் நடைபெற காரணம் என்ன? அந்த கைப்பேசியில் கடைசியாக பேசிய நபர்கள் யார் என்பது குறித்த பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Acid thrown on woman face and killed near Uthukottai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.