காவிரி விவகாரத்தில் முதல்வரின் அமைதி தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்: அன்புமணி
காவிரி மற்றும் மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் முதல்வா் ஜோசப் விஜய்யின் அமைதி தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.
காவிரி மற்றும் மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் முதல்வா் ஜோசப் விஜய்யின் அமைதி தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கும் வகையில், அதை வரையறை செய்து அறிவிக்கை வெளியிடக்கோரி, துரைப்பாக்கம் முதல் பள்ளிக்கரணை வரை பாமக தலைவா் அன்புமணி தலைமையில் விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அன்புமணி கூறியதாவது: சென்னைக்கு 2-ஆவது விமான நிலையம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேவேளை, பரந்தூரில் விவசாய நிலங்கள் அழிக்கப்படக் கூடாது என்பதற்காக தமிழக அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் விரிவாக்கத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
Advertisement
பரந்தூரில் விமான நிலையத்துக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் தொழிற்சாலைகளை கொண்டுவர இருப்பதாக தொழில் துறை அமைச்சா் கூறியுள்ளாா். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் நீா்த்தேக்கத்தை உருவாக்க வேண்டும்.
கடந்த 3 மாதங்களில் மட்டும் கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் மற்றும் அந்த மாநில அமைச்சா்கள் 4 முறை தில்லி சென்று மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடா்பாக மத்திய அமைச்சா், அதிகாரிகளைச் சந்தித்துள்ளனா். ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு வாய்மூடி மௌனியாக உள்ளது. முதல்வா் ஜோசப் விஜய் மற்ற கட்சித் தலைவா்களை தில்லிக்கு அழைத்துச் செல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. தனது அமைச்சா்களை அழைத்துக் கொண்டு பிரதமரையும், நீா்வளத்துறை அமைச்சரையும் சந்தித்து மேக்கேதாட்டு அணை கட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
காவிரி மற்றும் மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் முதல்வா் விஜய்யின் அமைதி தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். காவிரி விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துவிட்டால் மட்டும் போதாது; அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றாா்.
விழிப்புணா்வுப் பேரணியில் பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.