பள்ளியில் மாணவர்கள் உயிர்போகும் அளவுக்கு சம்பவங்கள் நடப்பது கொடுமையின் உச்சம்: இபிஎஸ்
பள்ளியில் விஷப்பாம்பு கடித்து மாணவன் பலியானது குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
பள்ளிகளில் விஷப் பாம்பு, பூச்சி கடித்து மாணவர்கள் உயிரிழப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகக் கூறிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பள்ளி வளாகத்தில் புகுந்த விஷப்பாம்பு கடித்ததில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தில் அரசுப் பள்ளியில் விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
Advertisement
Advertisement
அம்மாணவர்களின் தாய், தந்தையர்க்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். திமுக ஆட்சியில், அடிப்படைக் கட்டமைப்போ, சுகாதாரமோகூட இல்லாத அரசுப் பள்ளிகளின் அவல நிலையால், மாணவர்கள் உயிர் போகும் அளவு சம்பவங்கள் நிகழ்வது என்பது கொடுமையின் உச்சம். மேற்கூரை இடிந்து விழுந்து விடுமோ? சுவர் தன் மீது விழுந்துவிடுமோ? தரமற்ற உணவால் பாதிப்பு வருமோ? போன்ற அச்சங்களுக்கு நடுவேதான் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு செல்லவேண்டி இருக்கிறது.
இதற்கு நடுவே, கள்ளகுறிச்சி, ரிஷிவந்தியம் அருகே உள்ள கீழத்தேனூர் அரசுப் பள்ளியில் உயர்நிலை நீர்தேக்கத் தொட்டியை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ததாக வருகின்ற செய்தி மேலும் அதிர்ச்சி அளிக்கின்றது. இதற்குக்கூட ஆட்கள் நியமிக்க வக்கற்ற நிலையில்தான் பள்ளிக்கல்வித் துறை இருக்கிறதா? அரசுப் பள்ளிக்கு மாணவர்கள் படிக்க வந்தார்களா? அல்லது உங்களுக்கு வேலை செய்ய வந்தார்களா?
மாணவர்களின் பாதுகாப்பை சமரசம் செய்து இப்படிப்பட்ட ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவது குற்றம் என்பதை இந்த விடியா திமுக அரசு உணருமா? இந்த நிலைக்கு அரசுப் பள்ளிகளைத் தள்ளிவிட்ட திமுக அரசு, "கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" என ஆடம்பர மேடை அமைத்து, போலியான சுய விளம்பரம் செய்துகொள்வது வெட்கக்கேடானது.
பள்ளிகளின் பராமரிப்பை, சுகாதாரத்தை உறுதிசெய்ய வேண்டிய தனது தலையாய பணியை தூக்கி எறிந்துவிட்டு, ரீல்ஸ் எடுப்பது, கார் ஓட்டுவது, வாக்கிங் போவது என போட்டோஷூட் எடுப்பது மட்டுமே இருக்கும் ஒருவர், குரூப் 2 போன்ற அதிமுக்கிய தேர்வுகளைக்கூட முறையாக நடத்தத் தெரியாதவர், தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு . விஷப் பூச்சி, பாம்புக் கடியால் உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்தாருக்கான உரிய நிவாரணம் உடனடியாக வழங்கிட வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
Edappadi Palaniswami criticizes death of student after being bitten by a snake at school
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.