கலந்தாய்வு முடிந்தும் பணி ஆணை கிடைக்காமல் தவிக்கும் 1,429 சுகாதார ஆய்வாளர்கள்!
கலந்தாய்வு முடிந்தும் 1,429 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி ஆணை கிடைக்காதது குறித்து...
கலந்தாய்வு முடிந்தும் 1,429 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி ஆணை கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர்கள் (நிலை-2) பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழ்நாடு மருத்துவ பணியளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி) சார்பில் கடந்த 2025 அக்டோபரில் அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து, சுகாதார ஆய்வாளர் பணிக்கான தேர்வைக் கடந்த 2025 டிசம்பர் 7 அன்று தமிழ்நாட்டில் சுமார் 11 ஆயிரம் தேர்வர்கள் 84 மையங்களில் கணினி வழியாகத் தேர்வுகளை எழுதினர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற 2,121 தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் 2026 ஜனவரி 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற்றது.
பின்னர், ஜனவரி 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் 1,401 பேர் கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டு, பணிபுரியும் இடங்களை தேர்வு செய்துள்ளனர். தற்போது, பணி நியமன ஆணைகளை பெறுவது மட்டுமே இறுதியாக உள்ளது.
3 ஆண்டுகள் பரிதவிப்பு
ஏற்கனவே, சுகாதார ஆய்வாளர் பணிக்கான அறிவிப்புகள் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்டது. ஆனால், 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்றதால் சுமார் 3 ஆண்டுகள் இந்தப் பணிக்கான தேர்வுகள் நடைபெறவில்லை எனக் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) நடத்திய தேர்வுகள் முடிந்து, பணி நியமன ஆணைகள் பெறும் சூழலில், சிலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்குத் தொடர்ந்ததால் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
கலந்தாய்வு முடிந்த நிலையில், பணி நியமன ஆணை கிடைக்காமல் தேர்வர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த இடங்களில் பணிகளைக் கைவிட்ட நிலையிலும், பலர் வறுமை நிலையிலும், திருமணம் முடிந்தவர்களாகவும் உள்ளனர்.
இன்னும் ஓரிரு வாரங்களில் 2026 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் சூழல் உள்ளது.
எனவே, உயர்நீதிமன்ற உத்தரவு தொடர்பான பணிகளை தமிழக அரசு விரைந்து முடிக்க வேண்டும் எனவும், 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்ற நடவடிக்கையால் காத்திருக்கும் சுகாதார ஆய்வாளர்களுக்கு, பணி நியமன ஆணைகளை விரைந்து வழங்க வேண்டுமெனவும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
It has been reported that 1,429 health inspectors have not received work orders even after the consultation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.