பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!
டிக்கெட் பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது தொடர்பாக...
எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் வழக்குரைஞர் மோகனாவுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததாக எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணி மற்றும் பயணச்சீட்டு பரிசோதகருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் விடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில், பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கியதாக வழக்குரைஞர் மோகனா மீதும், வழக்குரைஞர் மோகனா அளித்த புகாரில் பயணச்சீட்டு பரிசோதகர் மீதும் எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி வழக்குரைஞர் மோகனா, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ஜூலை 4 ஆம் தேதி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, பேருந்து நிலையம் செல்ல எழும்பூர் ரயில் நிலைய நடைபாதையில் காத்திருந்தேன்.
அப்போது, அங்கு வந்த பயணச்சீட்டு பரிசோதகர், தன்னை பயணச்சீட்டு எடுக்காமல் ரயிலில் பயணம் செய்ததாகக் கூறி தகராறில் ஈடுபட்டார். அதற்கு பேருந்து நிலையம் செல்ல காத்திருப்பதாகவும், தான் வழக்குரைஞர் எனக் கூறியும் பரிசோதகர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதையடுத்து, அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தனது செல்போனை பறித்ததுடன், தாக்குதலும் நடத்தினார். அதை தடுப்பதற்காக மட்டுமே முயற்சி செய்தேன். பின்னர், இது தொடர்பான விடியோ வெளியான நிலையில், இருவர் தரப்பிலும் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பால் கனகராஜ், பயணச்சீட்டு பரிசோதகர்தான் தாக்குதலில் ஈடுபட்டார். வழக்குரைஞர் மீது எந்த தவறும் இல்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்குரைஞர் மோகனாவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Anticipatory bail granted to a lawyer in a case involving the assault of a ticket examiner.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.