நெல்லையில் காங்கிரஸ் கோஷ்டி மோதல்: எம்.பி. கண்முன்னே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!
நெல்லையில் காமராஜர் பிறந்தநாள் விழாவின் போது, காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர்கள் இருவர் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டது தொடர்பாக...
நெல்லையில் காமராஜர் பிறந்தநாள் விழாவின் போது, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையிலேயே முன்னாள் மாவட்ட தலைவர்கள் இருவர் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வண்ணார்பேட்டையில் உள்ள நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் ராமேஷ்வரன் தலைமையில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு தொடங்கியது.
முன் வரிசையில் நிறுப்பது தொடர்பாக வாக்குவாதம்
அப்போது, திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சங்கர பாண்டியன் மற்றும் உமாபதி சிவன் ஆகியோருக்கு இடையே புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் போது, முன் வரிசையில் நிறுப்பது தொடர்பாக திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
போர்க்களமாக மாறிய காங்கிரஸ் அலுவலகம்
முதலில் வாய்மொழியாகத் தொடங்கிய இந்த மோதல், சில நிமிடங்களிலேயே முற்றியது. இதில் ஆத்திரமடைந்த இருவரும், நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் மற்றும் பிற நிர்வாகிகள் முன்னிலையிலேயே ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதனால் காங்கிரஸ் அலுவலகமே போர்க்களமாக மாறியது.
நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் தாக்குதல்
திடீரென ஏற்பட்ட இந்த கைகலப்பால் அதிர்ச்சியடைந்த மற்ற நிர்வாகிகள் மற்றும் எம்.பி, இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். காமராஜர் பிறந்தநாள் போன்ற ஒரு முக்கிய நாளில், கட்சி அலுவலகத்திலேயே மூத்த நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே அதிருப்தியையும், மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Congress factional clash in Nellai: Commotion as members attack each other in the presence of the MP...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.