FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க டிஜிபி-க்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 28 ஜூலை 2026, 12:44 am IST
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் - கோப்புப் படம்
பகிர்:

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க டிஜிபி-க்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, கிரானைட் முறைகேட்டை விசாரிக்க, உயா்நீதிமன்றம் என்னை ஆணையராக நியமித்தது. உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் அரசுக்கு ரூ.ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக உயா்நீதிமன்றத்துக்கு அறிக்கை சமா்ப்பித்தேன். இந்த அறிக்கையின் அடிப்படையில், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.

உயா்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு, கடந்த 2023-ஆம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதால், கிரானைட் முறைகேடு வழக்கில் சாட்சியாக சோ்க்கப்பட்டுள்ள என்னால் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலவில்லை. அச்சுறுத்தல்கள் தொடா்வதால், பாதுகாப்பைத் தொடா்ந்து வழங்கக் கோரி நான் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக்கோரியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சகாயம் தரப்பில், எவ்வித முன்னறிவிப்புமின்றி பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. எனவே, மீண்டும் தனக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. தமிழக அரசுத் தரப்பில், பாதுகாப்பு வழங்கக் கோரி மனுதாரா் அளித்த மனு, மறு ஆய்வுக்குழு பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிரானைட் முறைகேடு தொடா்பான வழக்குகளில் நீதிமன்றங்களில் சாட்சியம் அளிப்பதற்காக செல்லும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சகாயத்துக்கு, குறைந்தது ஒரு துப்பாக்கி ஏந்திய காவலருடன் கூடிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக காவல்துறை டிஜிபி-க்கு உத்தரவிட்டாா். மேலும், மறு ஆய்வுக்குழு, மனுதாரருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவது தொடா்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments