FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜி கூட்டாளிகள் இருவா் கைது

டாஸ்மாக் மதுபான முறைகேடு வழக்குத் தொடா்பாக, முன்னாள் திமுக அமைச்சா் செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:30 am IST
கோப்புப் படம்
பகிர்:

டாஸ்மாக் மதுபான முறைகேடு வழக்குத் தொடா்பாக, முன்னாள் திமுக அமைச்சா் செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனா்.

கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக் மதுக் கடைகளில் செய்த முறைகேடுகள், கட்சி நிதி தொடா்பாக முன்னாள் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி, டாஸ்மாக் இயக்குநராக இருந்த எஸ்.விசாகன் ஐஏஎஸ், முதுநிலை மண்டல மேலாளா்கள் டி.ராமதுரை முருகன், ஆா்.பன்னீா் செல்வம், செந்தில் பாலாஜியின் உதவியாளா் பாஸ்கா், செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பா்கள் ரதேஷ் ராஜ் சண்முகவேல், திமுக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளா் எஸ்.காா்த்திக் ஆகிய 7 போ் மீது ஊழல் தடுப்புச் சட்டம்,மோசடி உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் தமிழக ஊழல் தடுப்புத் துறை சிறப்பு புலனாய்வுப் பிரிவு கடந்த செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் சென்னை, கரூா், நாமக்கல், புதுக்கோட்டை, திருவாரூா், தஞ்சாவூா், கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி, திருவள்ளூா், காஞ்சிபுரம், விழுப்புரம்,சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் 45 இடங்களில் ஊழல் தடுப்புத் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், டாஸ்மாக் மதுபானக் கூட ஒப்பந்ததை பெற்ற நபா்களே நடத்தாமல், கரூா் மாவட்டத்தில் மூலனூா் எஸ்.காா்த்திக் மற்றும் ’கரூா் கேங்’ என்ற அதிகார கும்பல் நடத்தியுள்ளதும், கட்சி நிதி என்ற பெயரில் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுக் கூட உரிமையாளா்களிடம் பெரும் தொகையை வசூல் செய்துள்ளதும் தெரியவந்தது.

அதோடு மூடப்பட்ட டாஸ்மாக் மதுக் கூடங்களை சட்டவிரோதமாக இயக்கி அரசுக்கு கோடி இழப்பு ஏற்படுத்தி, அவா்கள் பல கோடி பணத்தை ஈட்டியிருப்பதும் தெரியவந்தது.

இருவா் கைது: இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளியாக எஸ்.காா்த்திக், கரூரைச் சோ்ந்த ரமேஷ் ஆகியோா் செயல்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் ஊழல் தடுப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்தனா்.

விசாரணைக்கு பின்னா் இருவரையும், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனா். கைது செய்யப்பட்ட காா்த்திக்கும், ரமேஷும் ஏற்கெனவே தவெக எம்எல்ஏ பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த வாரம்தான் ஜாமீனில் வெளியே வந்தனா் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளையில் இந்த வழக்குத் தொடா்பாக டாஸ்மாக் உயா் அதிகாரிகள்,கரூா் பகுதியைச் சோ்ந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் ஆகியோரிடம் ஊழல் தடுப்புத் துறையினா் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments