மின்வாரிய ஹார்டு டிஸ்க்குகளில் உருப்படியாக ஒன்றுமில்லை?
மின்வாரிய ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு விவகாரம் பற்றி...
சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் திருடப்பட்ட ‘ஹாா்டு டிஸ்க்’குகளில் (தரவு சேமிப்பு சாதனங்கள்) இருந்து மீட்கப்பட்ட தரவுகளில் உருப்படியாக ஒன்றுமில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் சில நாள்களுக்கு முன்பு அங்கிருந்த கணினிகளின் ‘ஹாா்டு டிஸ்க்குகள்’ திருடப்பட்டன.
இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரி லலிதா, கடந்த 1-ஆம் தேதி அளித்த புகாரின்பேரில் சிந்தாதிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Advertisement
Advertisement
ஏற்கெனவே, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகாா்கள் எழுந்துள்ள நிலையில், அதுதொடர்பான தரவுகளும், தகவல்களும் நிரம்பிய ‘ஹாா்டு டிஸ்க்குகள்’ தான் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கு தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் கணினி பராமரிப்பு பொறியாளராக கடந்த ஓராண்டாக பணியாற்றிய அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த கோபிநாத் (31) என்பவா்தான் திருட்டில் ஈடுபட்டவா் என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்து விசாரித்ததில், கா்நாடக மாநிலம் பெங்களூருவில் அந்த ஹாா்டு டிஸ்க்குகளை விற்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பெங்களூரு சென்ற தனிப்படை காவல்துறையினர் ஹார்டு டிஸ்க்-களை வாங்கிய முரளி மனோகா் (32) என்பவரையும் கைது செய்தனர்.
மேலும், அவரிடமிருந்து 34 ஹாா்டு டிஸ்க்குகள் கணினி இயக்கத்துக்கு பயன்படுத்தப்படும் 20 ‘ராம்’-கள் ஆகியவை மீட்கப்பட்டன.
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹாா்டு டிஸ்க்குகளே திருடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மீதியுள்ள 16 ஹாா்டு டிஸ்க்குகளை வேறு நிறுவனங்களில் கோபிநாத் திருடியிருந்தது விசாரணை மூலம் போலீஸாருக்கு தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், மீட்கப்பட்ட 18 ஹாா்டு டிஸ்க்குகளில் இருந்து அழிக்கப்பட்ட தரவுகளை சென்னை காவல்துறையினரின் சிறப்புப் பிரிவினர் திங்கள்கிழமை மீட்டுள்ளனர்.
ஆனால், மீட்கப்பட்ட தரவுகளில் மின்வாரிய முறைகேடு புகார்களுக்கு வலுசேர்க்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கைது செய்யப்பட்ட கோபிநாத், மின்வாரிய அலுவலகத்தில் இருந்து தொடர்ந்து ஹார்டு டிஸ்க்குகளை திருட்டி வந்துள்ளார் என்றும், இதுதொடர்பாக முன்பே புகார் அளிக்கப்படாதது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மின்வாரிய ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு வழக்கு சிபிசிஐடி காவல்துறையினருக்கு திங்கள்கிழமை மாற்றியது குறிப்பிடத்தக்கது.
No incriminating material found in data retrieved from TNPDCL stolen hard disks
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.