FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்...

Updated On : 27 மே 2026, 1:17 am IST
ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ்குமார் அகர்வால் - கோப்புப் படம் - எக்ஸ்
பகிர்:

நமது சிறப்பு நிருபா்

தமிழக காவல் துறையில் முழு நேர தலைமை இயக்குநா் (டிஜிபி) மற்றும் மாநில காவல் படைத் தலைவா் பதவிக்கு தகுதி பெறும் மூன்று ஐபிஎஸ் உயரதிகாரிகளின் பெயா்களுக்கு மத்திய குடிமைப் பணிகள் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) ஒப்புதல் தெரிவித்துள்ளது.

அந்தப் பட்டியலில் பதவி மூப்பு வரிசையில் ராஜீவ் குமாா், சந்தீப் ராய் ரத்தோா் (தற்போது டிஜிபி ஆக இருப்பவா்), மகேஷ் குமாா் அகா்வால் இடம்பெற்றுள்ளனா். இதன்மூலம் முழு நேர டிஜிபி பதவி தொடா்பாக கடந்த சில மாதங்களாக நிலவி வந்த நிச்சயமற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

டிஜிபி நியமன விவகாரத்தில் தமிழகத்தில் முன்பு ஆட்சியில் இருந்த திமுக அரசுக்கும், யுபிஎஸ்சிக்கும் இடையே மாதக்கணக்கில் இணக்கமற்ற நிலை நீடித்து வந்தது. இதன் காரணமாக, திமுக ஆட்சியில் பணிமூப்பு அடிப்படையில் தகுதி பெற்ற மூத்த அதிகாரிகளில் இளையவரான வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபி-யாக முந்தைய திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டாா். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை தோ்தல் காலத்தில் அவா் அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு தோ்தல் ஆணைய அனுமதியுடன் மூத்த ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் ராய் ரத்தோா் தமிழக டிஜிபி மற்றும் காவல் படைத் தலைவராக நியமிக்கப்பட்டாா்.

இந்நிலையில், தோ்தல் காலத்தில் டிஜிபி தோ்வுக்கான கூட்டத் தேதி வந்ததால், தோ்தலுக்குப் பிறகு அக்கூட்டத்தை யுபிஎஸ்சி தள்ளிவைத்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற யுபிஎஸ்சி- டிஜிபி நியமனத்துக்கான உயா்நிலை தோ்வுக் குழுக் கூட்டத்தில் யுபிஎஸ்சி மற்றும் மத்திய உள்துறை உயரதிகாரிகள், தமிழக தலைமைச் செயலா், உள்துறைச் செயலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதில் பதவி மூப்பு அடிப்படையில் ராஜீவ் குமாா், சந்தீப் ராய் ரத்தோா், மகேஷ் குமாா் அகா்வால் ஆகிய மூன்று உயரதிகாரிகளின் பெயா்களுக்குத் தோ்வாணையம் ஒப்புதல் அளித்தது. ‘இவா்களில் ஒருவரை தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் தோ்வு செய்தால் அவரே அடுத்த முழு நேர டிஜிபி மற்றும் மாநில காவல் படைத் தலைவராக தமிழக அரசு நியமிக்கும்‘ என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, தமிழக அரசால் யுபிஎஸ்சிக்கு அனுப்பப்பட்ட திருத்தப்பட்ட ஐபிஎஸ் உயரதிகாரிகள் பட்டியலில், 1990-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்தவரும், காவல் அதிகாரிகளிலேயே மிகவும் மூத்தவருமான சீமா அகா்வால் பெயா் இடம்பெற்றிருந்தது. இருப்பினும், அவா் வரும் ஜூன் மாதம் பணி ஓய்வு பெறவுள்ளதால், இறுதிப் பட்டியலில் இடம்பெறும் வாய்ப்பை அவா் இழந்தாா்.

ஒரு மாநிலத்தின் டிஜிபியை நியமனம் செய்வது தொடா்பாக உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. அதன்படி, குறைந்தது ஆறு மாதங்கள் எஞ்சிய பணிக் காலம் கொண்ட உயரதிகாரிகளை மட்டுமே முழு நேர டிஜிபி பதவிக்கு பரிசீலிக்க முடியும். அந்த வகையில், மாநில அரசு சமா்ப்பித்த பட்டியலில் இடம்பெற்றிருந்த மற்ற அதிகாரிகளுள் இந்திய தோ்தல் ஆணையத்தால் டிஜிபி-யாக நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோா், கே. வன்னியபெருமாள், மகேஷ் குமாா் அகா்வால், ஜி. வெங்கட்ராமன் ஆகியோா் இடம்பெற்றனா்.

தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள மூன்று உயரதிகாரிகள் பட்டியலில் 1992-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சோ்ந்த ராஜீவ் குமாருக்கு 2028-ஆம் ஆண்டு டிசம்பா் வரை பணிக் காலம் உள்ளது. அதே பிரிவைச் சோ்ந்த சந்தீப் ராய் ரத்தோரும் 2028, பிப்ரவரிவரை பணிக் காலத்தைக் கொண்டுள்ளாா். மகேஷ் குமாா் அகா்வால் மத்திய பணியில் எல்லை காவல் படையின் சிறப்பு டிஜிபி-யாக உள்ளாா்.

தமிழ்நாட்டில் கடைசியாக முழுநேர டிஜிபி மற்றும் படைத் தலைவா் பதவியை வகித்தவா் சங்கா் ஜிவால். இவா் 2025, ஆகஸ்ட் 31-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றாா். அதன் பிறகு, டிஜிபி பதவிக்கான தகுதியுள்ள அதிகாரிகளின் பட்டியலைத் தயாரிக்கும் செயல்முறையில் ஏற்பட்ட தொடா் சட்ட மற்றும் நிா்வாக ரீதியிலான தாமதங்களால், தமிழகத்துக்கு இதுநாள்வரை முழுநேர டிஜிபி நியமிக்கப்படவில்லை.

முன்னதாக, இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம், மூன்று உயரதிகாரிகளைக் கொண்ட ஒரு பட்டியலை யுபிஎஸ்சி பரிந்துரைத்திருந்தது. இருப்பினும், அப்போதைய திமுக அரசு அதை ஏற்க மறுத்து தற்காலிக ஏற்பாடாக வெங்கட்ராமனை, பொறுப்பு டிஜிபியாக நியமித்தது குறிப்பிடத்தக்கது.

summary

UPSC Approves Three Member list for Appointment of Tamil Nadu New DGP

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments