விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்: தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தால் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது குறித்து...
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு மேல உளூர் பகுதியில் மின் மோட்டாரின் காப்பர் வயர்களை திருடும் நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் - இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சுற்றுவட்டார பகுதிகளான மேல உளூர், தென்னமநாடு, பொன்னாப்பூர், பருத்திக்ககோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மின் மோட்டாரில் இருந்து காப்பர் வயர்கள் திருடப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
Advertisement
Advertisement
இது குறித்து காவல்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் ஏற்படுவதாகும் - விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே, காப்பர் வயர்களை திருடும் நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் - இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தி, மேல உளூர் பகுதியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.