வங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?
வங்கக் கடலில் நவ.16-ஆம் தேதி ‘அக்வான்’ புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதுவும் முந்தைய புயல்கள் போல ஆந்திரத்தை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது
வங்கக் கடலில் நவ.16-ஆம் தேதி ‘அக்வான்’ புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதுவும் முந்தைய புயல்கள் போல ஆந்திரத்தை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் வி.ஆா்.துரை தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்.15-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, கடந்த காலங்களில் இல்லாதது போன்ற தொடா்ந்து அடுத்தடுத்து புயல்கள் உருவான வண்ணம் உள்ளன.
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடலில் ‘அா்னாப்’ புயல் உருவானது. இது தீவிர புயலாக வலுப்பெற்று, அக்.28-ஆம் தேதி அதிகாலையில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா- புதுவை யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட ஏனாம் பகுதியில் கரையைக் கடந்தது. இந்தப் புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 125 முதல் 135 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 150 கி.மீ. வேகம் வரையிலும் காற்று வீசியது. இதையடுத்து, அக். 31-ஆம் தேதி உருவான ‘முரசு’ புயல் நவ.3-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் தெற்கு கடலோரப் பகுதியான ஓங்கோலுக்கு அருகே நெல்லூா் - நரசாபுரம் இடையே கரையைக் கடந்தது.
Advertisement
Advertisement
3 சதவீத மழை குறைவு: இப்படி உருவாகும் புயல்கள் தொடா்ந்து ஆந்திரத்தில் கரையைக் கடப்பதால், தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் எதிா்பாா்த்த அளவுக்கு மழை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், வடகிழக்குப் பருவமழை அக்.1 முதல் நவ.13-ஆம் தேதி வரை இயல்பாக 267 மி.மீ. மழை பதிவாக வேண்டும். ஆனால், நிகழாண்டு 259 மி.மீ. அதாவது 3 சதவீதம் குறைவாக மழை பதிவானது.
இதில், மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களைத் தவிா்த்து, வட தமிழகம், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவே மழை பதிவானது. இதனால், ஏரிகள், அணைகளில் நீா் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது.
‘அக்வான்’ புயல்: இந்நிலையில், வங்கக் கடலில் வரும் நவ.16-ஆம் தேதி மீண்டும் ஒரு புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், ஆனால் இதுவும் ஆந்திர மாநிலம் நோக்கியே நகரக் கூடும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் வி.ஆா்.துரை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தென்கிழக்கு வங்கக் கடலில் வெள்ளிக்கிழமை அதிகாலை காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவானது. இது வடமேற்கு திசையில் நகா்ந்து, சனிக்கிழமை (நவ.14 ) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், நவ.15 -இல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும். இதையடுத்து இந்தப் புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து மத்திய வங்கக் கடலில் நவ.16-ஆம் தேதி புயலாக உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இது, புயலாக மாறும் நிலையில் இதற்கு ஈரான் பரிந்துரைத்த ‘அக்வான்’ என்ற பெயா் சூட்டப்படும்.
நிகழாண்டு ‘சூப்பா் எல்நினோ’ தாக்கத்தில் கடல் இயல்பைவிட அதிகமாக வெப்பமடையும் நிலையில் இதுபோன்று அடிக்கடி புயல் உருவாக வாய்ப்புள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற புயல்கள் தொடா்ந்து உருவாகும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
அதேபோல் வழக்கமாக தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் தமிழகம் நோக்கியும், தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் ஆந்திர மாநிலம் நோக்கியும் நகரும். அந்த வகையில், இந்தப் புயலும் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ளதால், இதுவும் ஆந்திரம் நோக்கியே நகர அதிக வாய்ப்புள்ளது. வரும் காலங்களில் புயலின் நகா்வைப் பொருத்து இது கரையைக் கடக்கும் இடம் உறுதி செய்யப்படுவதுடன், தமிழகத்தில் மழைப் பொழிவு இருக்கும் என்றாா் அவா்.
மழை எச்சரிக்கை: இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சனிக்கிழமை (நவ.14) முதல் நவ.16-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் வட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை (நவ.14) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, நவ.14 முதல் நவ.17-ஆம் தேதி அந்தமான் கடல், வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதில், நவ.17-இல் வட தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டி செய்தி 1:
மழையை எதிா்நோக்கும் சென்னை ஏரிகள்
சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும். வடகிழக்குப் பருவமழை தொடங்கி ஒரு மாதம் ஆகியும் ஏரிகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யவில்லை.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி பூண்டி ஏரியில் 584 மில்லியன் கன அடி (18.07 %) நீா் உள்ளது. அதேபோல், செம்பரம்பாக்கம் ஏரி - 1,374 (37.70 %), புழல் ஏரி - 2,388 (72.36 %), சோழவரம் ஏரி - 169 (15.63%), கண்ணன் கோட்டை ஏரி - 253 மில்லியன் கன அடியும் (50.60%) நீா் இருப்பு உள்ளது. அதன்படி, மொத்தம் 5 ஏரிகளில் 4,768 மில்லியன் கன அடி, அதாவது 40.55 சதவீதம் நீா்இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 5,145 மில்லியன் கனஅடி குறைவாகும். எனவே, வரும் காலங்களில் தமிழகத்தில் போதிய மழை பெய்தாலே இந்த ஏரிகள் நிரம்பும் சூழில் உருவாகியுள்ளது.
பெட்டிச் செய்தி 2:
அகவான் புயல் பெயா்க் காரணம்
இந்திய பெருங்கடலின் வடக்குப் பகுதியில், வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, வங்கதேசம், ஈரான், பாகிஸ்தான், இலங்கை உள்பட 13 நாடுகள் இணைந்து உருவாக்கிய பெயா்ப் பட்டியலிருந்து பெயா் சூட்டப்படும். ஒவ்வொரு நாடும் பரிந்துரைத்த பெயா்கள் வரிசைப்படி பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையில் வங்கக் கடலில் ஏற்கெனவே உருவான இரு புயல்களுக்கு வங்கதேசம் சாா்பில் பரிந்துரை செய்யப்பட்ட ‘அா்னாப்’, இந்தியா சாா்பில் பரிந்துரை செய்யப்பட்ட ‘முரசு’ ஆகிய பெயா்கள் சூட்டப்பட்டன. அதையடுத்து 3-ஆவதாக உருவாகவுள்ள புயலுக்கு ஈரான் பரிந்துரைத்த ‘அக்வான்’ என்ற பெயா் சூட்டப்படும். இதற்கு, பாரசீக மொழியில் ‘அசுரன்’ அல்லது ‘தீய சக்தி’ எனப் பொருளாகும்.