உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து அமைதி காக்க வேண்டும்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து அமைதி காக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியிருப்பது பற்றி...
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து அமைதி காக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘மத நல்லிணக்கம், பொது அமைதி’ என சிலர் எத்தனை முகமூடிகளை அணிந்து கொண்டாலும், இந்துக்கள் மீதுள்ள அவர்களின் காழ்ப்புணர்ச்சி அப்பட்டமாக தெரிகிறது!
திருப்பரங்குன்ற திருக்கோவிலுக்கு சொந்தமான தீபத்தூணில், இந்த வருடம் மட்டும் கார்த்திகை தீபம் ஏற்றுங்கள் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை,
Advertisement
Advertisement
தவெக அரசு தெரிந்தே உதாசீனப்படுத்தியது யாருக்கும் தவறாக தெரியவில்லையா?
இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 144-இன் படி, அனைத்து மாநில அரசுகளும் நிர்வாக அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதை மீறி, சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக தவெக அரசு வேண்டுமென்றே தமிழகத்தில் நிர்வாகச் சீர்குலைவை உண்டாக்கியது யாருக்கும் தவறாக தெரியவில்லையா?
உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தக் கூடாது என்பதற்காக அவசர அவசரமாக அறங்காவலர் குழு கூட்டப்பட்டதும், திருக்கோவிலின் ஸ்தானீக பட்டர்களை மிரட்டியும், கலந்தாலோசிக்காமலும் ஒரு பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டதும், தவெக அரசின் காவல்துறையும் மாவட்ட ஆட்சியரும் சட்டத்திற்கு எதிராக ஆணவத்துடன் செயல்பட்டதும் யாருக்கும் தவறாக தெரியவில்லையா?
"ஒடியா விழவின் நெடியோன் குன்றம்" என அகநானூறு கொண்டாடிய கந்தர் மலையை ‘சிக்கந்தர் மலை’ எனக் கூறி சிலர் போராட்டம் நடத்தியதும், முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளை தவெக அரசு திட்டமிட்டு பறிக்க நினைத்ததும் யாருக்கும் தவறாக தெரியவில்லையா? இந்துக்களின் மத நம்பிக்கைகள் மீது கல்லெறிபவர்களை மட்டும் கண்டிக்காமல் கடந்து போவது என்ன மாதிரியான மத நல்லிணக்கம்?
எனவே, அனைத்து மதங்களின் அடையாளங்களையும், வழிபாட்டு உரிமைகளையும், மத உணர்வுகளையும் மதித்து, அவரவர் தெய்வங்களை அவரவர் விரும்பும் வழியில் வணங்க முழுச் சுதந்திரம் உண்டு என்பதை உணர்ந்து, பிறரின் மதச் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதே உண்மையான மத நல்லிணக்கம் என்பதை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்!
‘மத நல்லிணக்கம்’ என்ற பெயரில் சமூகத்தில் தேவையற்ற மதக் குழப்பங்களையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் போக்கைக் கைவிட்டு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து அமைதி காக்க வேண்டும்! என்று தெரிவித்துள்ளார்.