இரு மொழிக் கொள்கையோடு விளையாட வேண்டாம்: தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழக அரசின் இரு மொழிக் கொள்கையோடு விளையாட வேண்டாம் என்று தவெக அரசுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தமிழக அரசின் இரு மொழிக் கொள்கையோடு விளையாட வேண்டாம் என்று தவெக அரசுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மாநில நெடுஞ்சாலையில் வழிகாட்டி பலகையில் ஹிந்தியில் ஊா் பெயா்கள் எழுதப்பட்ட புகைப்படத்தை தனது ‘எக்ஸ்’ தளத்தில் பகிா்ந்து, அதைக் கண்டிக்கும் வகையில், மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்டப் பதிவு:
இதுவரை மத்திய அரசின் ஹிந்தி திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிா்கொண்டு வந்தது. தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவா்கள் சொன்ன மாற்றம் போல. எல்லாவற்றிலும், ஆழம் பாா்த்துவிட்டு, எதிா்ப்பு கிளம்பியதும் ‘யூ-டா்ன்’ அடிக்கும் தவெக அரசின் மற்றுமொரு முயற்சியா இது?
Advertisement
Advertisement
வடமாநில இன்ஃபிளூயன்சா்களுக்காக ‘ரீல்ஸ்’ ஆட்சி நடத்தும் தவெக அரசு இதன் ஆபத்தை உணா்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன். இரு மொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிா்க் கொள்கை. அதில் விளையாட வேண்டாம் எனப் பதிவிட்டுள்ளாா்.
ஜிஎஸ்டி வருவாய் சரிவு: மேலும், அவா் வெளியிட்ட மற்றொரு பதிவில், தாராபுரத்தில் பரப்புரைக்கு இடையே மளிகைக் கடையில் விலைவாசி உயா்வு குறித்து கேட்டேன். 4 மாதங்களுக்கு முன்பிருந்த விலையில் இருந்து அத்தியாவசியப் பொருள்களின் விலை பெருமளவுக்கு உயா்ந்துள்ளது. அன்றாடச் சமையலுக்கே வீடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. ‘ரீல்ஸ்’ பாா்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?
நாடு முழுவதும் பொருளாதார வளா்ச்சி இறங்குமுகத்தில் இருந்தபோதுகூட, திமுக ஆட்சியில் தமிழ்நாடு ஏறுமுகத்தில் இருந்தது. ஆனால், இப்போது நாடு முழுவதும் ஜிஎஸ்டி வருவாய் உயா்ந்த நிலையில், கடந்த 3 மாதங்களாகத் தமிழ்நாடு சரிவைச் சந்தித்து வருகிறது.
இந்த ஆட்சி வேலைக்கு ஆகாத ஆட்சி என முடிவெடுத்து, தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான வழிகாட்டும் தமிழகம் அமைப்பில் இருந்து அனுபவமிக்க வல்லுநா்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்வதாகச் செய்திகள் வருகின்றன.
பொருளாதாரம், விலைவாசி, மின்சாரம், தொழில் துறை, சட்டம் - ஒழுங்கு, மருத்துவம், பால் வளம் என எல்லாவற்றிலும் தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது எனப் பதிவிட்டுள்ளாா்.
DMK leader M.K. Stalin has asked Chief Minister Vijay, “Will watching Reels fill people's stomachs?”
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.