தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்
மின்கட்டணம், காய்கறி, பால், மளிகைப் பொருள்களின் விலை கடந்த ஆட்சியில் இருந்ததை விட அதிகரித்துள்ளதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம்...
தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு அதிகரித்து வருவதாகவும் மறுபுறம் கொலை எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (அக். 2) விமர்சித்தார்.
மின்கட்டணம், காய்கறி, பால் மற்றும் மளிகைப் பொருள்களின் விலை கடந்த ஆட்சியில் இருந்ததை விட தற்போது அதிகரித்து காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
தாராபுரம் இடைத்தேர்தலையொட்டி திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து மு.க. ஸ்டாலின் இன்று (அக். 2) பிரசாரம் மேற்கொண்டார்.
Advertisement
Advertisement
பிரசார மேடையில் தமிழக மக்கள் கடந்த 5 மாதங்களாக சந்தித்துவரும் இன்னல்களை பட்டியலிட்டுப் பேசினார். அவர் பேசியதாவது:
பல ஊர்களில் ஆளும் கட்சியினரை மக்கள் அனுமதிக்கவில்லை; இது போலி பிம்பத்தைக் காட்டும் முதல்வர் மீதான எதிர்ப்பு. சிறுமிகள் முதல் மூதாடிகள் வரை பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. முதல்வர் தொகுதி உள்பட பல இடங்களில் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது.
4 மாதங்களில் தவெக ஆட்சியின் சாதனைகளைக் கூற என்ன இருக்கிறது. கடன் தள்ளுபடி எனக் கூறி விவசாயிகளை ஏமாற்றியதா? ஷாக் அடிக்கும் மின் கட்டண உயர்வா? அரிசி விலை உயர்வை சொல்வதா? எதைச் சொல்வது.
பட்டினப்பாக்கம் தலைமைச் செயல கட்டடத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம், ஆவின் பாலுக்கு போராட்டம், பயிர்க்கடன் செய்யாததால் விவசாயிகள் போராட்டம், மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு பாஸ்களை கள்ளச் சந்தையில் விற்றதால் பக்தர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம், மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் என தமிழகம் முழுக்க போராட்டம்தான்.
போதைப்பொருள் குறித்து தகவல் கொடுப்பவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். தமிழ்நாட்டில் ஒருபுறம் விலைவாசி உயர்கிறது. மறுபுறம் கொலை எண்ணிக்கை உயர்கிறது.
கொடுத்ததை மனப்பாடம் செய்து மேடைகளிலும் சட்டப்பேரவையிலும் கத்தும் முதல்வர் மீடியாவை சந்திக்க பயப்படுவது ஏன்? தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரத்தில் இந்தியாவின் அனைத்து தலைவர்களும் பேசுகின்றனர். விஜய் பேச மறுப்பது ஏன்?
உங்கள் பணத்தில்தான் இடைத்தேர்தல் நடக்கிறது. நீங்கள் தேர்வு செய்த வேட்பாளர் விலைபோனதால், இடைத்தேர்தல் வந்துள்ளது.
தாராபுரம் வாக்காளர்கள் தன்மானம் மிக்கவர்கள், ஆணவத்தை அடக்க நீங்கள் தீர்ப்பு எழுதுங்கள் எனப் பேசினார்.
Rising prices on one hand rising murders on the other in Tamil Nadu M.K. Stalin tharapuram campaigns
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.