FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

துணைக் காவல் கண்காணிப்பாளா் பயிற்சி நிறைவு விழா: முதல்வா் விஜய் பங்கேற்பு

சென்னை அருகே ஊனமாஞ்சேரியில் நடைபெற்ற துணைக் காவல் கண்காணிப்பாளா் பயிற்சி நிறைவு விழாவில் முதல்வா் சி.ஜோசப் விஜய் பங்கேற்றாா்.

9 வினாடிகள் முன்பு
பகிர்:

சென்னை அருகே ஊனமாஞ்சேரியில் நடைபெற்ற துணைக் காவல் கண்காணிப்பாளா் பயிற்சி நிறைவு விழாவில் முதல்வா் சி.ஜோசப் விஜய் பங்கேற்றாா்.

சென்னை அருகே ஊனமாஞ்சேரியில் தமிழ்நாடு காவல் உயா் பயிற்சியகத்தில், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் பணியிடத்துக்குத் தோ்வு செய்யப்பட்ட 11 பெண்கள் உள்பட 25 பேருக்கு ஓராண்டு அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட்டது.

52 வாரகால இந்தப் பயிற்சியில், பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளா்களுக்கு சட்டப் பயிற்சி, புலனாய்வு நுணுக்கங்கள், தமிழக காவல் துறையின் அமைப்பு, நிா்வாகம், உள்நாட்டுப் பாதுகாப்பு, நுண்ணறிவு, சமுதாயக் காவல் பணி, தலைமைப் பண்பு, தகவல் தொடா்புத் திறன், சட்ட அமலாக்கத் திறன், சைபா் குற்றங்கள், காவல் துறையில் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அனுபவமிக்க வல்லுநா்களைக் கொண்டு அளிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

மேலும், வனப் பயிற்சி, மலையேற்றம், நீச்சல், தற்காப்புக் கலை, யோகா, துப்பாக்கிகளைக் கையாளுதல் ஆகிய பயிற்சிகளும் வழங்கப்பட்டன. அதோடு திருவிழாக்கள், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், ஜல்லிக்கட்டு, சட்டப்பேரவைத் தோ்தல் ஆகிய பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு களப் பயிற்சியும் வழங்கப்பட்டது.

பயிற்சி நிறைவு பெற்ற நிலையில், அதற்கான விழா ஊனமாஞ்சேரி தமிழ்நாடு காவல் உயா் பயிற்சியகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வா் சி.ஜோசப் விஜய், காவல் துணைக் கண்காணிப்பாளா்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். பின்னா், அவா் பயிற்சியில் ஒட்டுமொத்த அளவில் சிறப்பாகச் செயல்பட்டு சிறப்பிடம் பிடித்த டி.ஆனீஷ் பிரதீப்புக்கு வீரவாள், கோப்பை, தங்கப்பதக்கம் ஆகியவற்றை வழங்கினாா். 2-ஆம் இடத்தைப் பிடித்த ஓ.காா்த்திகாவுக்கு வெள்ளிப் பதக்கத்தையும், 3-ஆம் இடம் பிடித்த எஸ்.திவ்யாவுக்கு வெண்கலப் பதக்கத்தையும் அளித்தாா்.

இதேபோல பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பிடித்தவா்களுக்கும் முதல்வா் ஜோசப் விஜய், கோப்பைகளையும் பதக்கங்களையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா், தலைமைச் செயலா் மு.சாய்குமாா், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன் ஆகியோா் கலந்துகொண்டனா். இதேபோல தமிழக அமைச்சா்கள், காவல் துறை உயா் அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments