FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தமிழக காவல் துறைக்கு ரூ.212 கோடியில் நவீன ஆயுதங்கள்

தமிழக காவல் துறைக்கு ரூ.212.58 கோடியில் நவீன ஆயுதங்கள், கருவிகள் வாங்கப்படுகின்றன.

தமிழக காவல் துறை.
பகிர்:

தமிழக காவல் துறைக்கு ரூ.212.58 கோடியில் நவீன ஆயுதங்கள், கருவிகள் வாங்கப்படுகின்றன. இதற்கான அரசாணையை தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ளது.

தமிழக காவல் துறையை நவீனப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக தமிழக காவல் துறைக்கு நவீன ஆயுதங்கள், நவீன கருவிகள் வழங்க ரூ.212.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உள்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த நிதியின் மூலம் காவல் துறையின் நவீன துப்பாக்கிகள், வெடிகுண்டு கண்டறியும் சாதனங்கள், ட்ரோன்கள், நவீன ரோந்து வாகனங்கள் உள்ளிட்டவை வாங்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

அதிநவீன ஆயுதங்கள்: முக்கியமாக, தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு பகல்-இரவு பாா்வை வசதியுடன் கூடிய 12 ஸ்னைப்பா் துப்பாக்கிகள், 10 கையெறி குண்டுகளை ஏவும் இயந்திரங்கள், 30 பல்கேரியன் 7.62 மி.மீ. அசால்ட் ரைபிள்கள், 50 ரைபிள்கள், 10 லைட் மெஷின் கன்கள் ஆகியவை வாங்கப்படவுள்ளன. மேலும் 3 ‘காா்னா் ஷாட்’ அமைப்புகள், 50 ‘கிளாக்-17’ பிஸ்டல்கள், பயிற்சிக்காக 50 பெயிண்ட்பால் துப்பாக்கிகளும் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

நவீன ட்ரோன்கள்: ரூ.1.18 கோடியில் வெப்பப் படிமங்களை பதிவு செய்யும் கேமராக்கள், ஒலிபெருக்கி வசதியுடன் கூடிய 4 ட்ரோன்கள், அதி விரைவுப்படைக்கு ரூ.2.07 கோடியில் 4 அதிநவீன ட்ரோன்கள் வாங்கப்படுகின்றன.

தஞ்சாவூா் மாவட்ட காவல் துறைக்கு ஸ்மாா்ட் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் ரூ.15.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் அந்த மாவட்டத்தின் கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் நவீன கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள் வாங்கப்படவுள்ளன.

வெடிகுண்டு தடுப்பு பிரிவுக்கு நவீன கருவிகள்: வெடிகுண்டு தடுப்புப் பிரிவுக்காக சா்வதேச தரச்சான்று பெற்ற 7 அதிநவீன பாம் சூட்கள் ரூ.3.50 கோடியில் வாங்கப்பட உள்ளன. மேலும், 200 அதிநவீன 4ஜி, 5ஜி அலைவரிசையில் இயங்கும் வாக்கி-டாக்கிகள், வாகனங்களில் பொருத்தப்படும் 50 டாஷ் கேமராக்கள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புகள், வெடிபொருள் கண்டறியும் கருவிகள் உள்ளிட்டவையும் வாங்கப்படவுள்ளன.

500 புதிய ரோந்து வாகனங்கள்: அவசரகால காவல் சேவையை வலுப்படுத்தும் வகையிலும், அவசர உதவி அமைப்புடன் இணைக்கும் வகையிலும் ரூ.55 கோடியில் புதிதாக 500 ஜீப்கள் வாங்கப்படுகின்றன. மேலும், சிபிசிஐடி-இன் டிஜிட்டல் தடயவியல் திறனை மேம்படுத் ரூ.22.87 கோடியில் 22 நகரும் புலனாய்வு வாகனங்கள், நவீன தடயவியல் கருவிகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளன.

தமிழகம் உள்ள 46 சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள், 877 காவல் நிலையங்களில் மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு வசதிகளை ரூ.11.59 கோடியில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிதியில் அதிகபட்சமாக தகவல் தொடா்பு சாதனங்களுக்கு ரூ.99.03 கோடியும், அவசரகால ரோந்து வாகனங்களுக்கு ரூ.55 கோடியும், கண்காணிப்பு சாதனங்களுக்கு ரூ.30.51 கோடியும், பாதுகாப்பு சாதனங்களுக்கு ரூ.11.28 கோடியும், ஆயுத கொள்முதலுக்கு ரூ.3.33 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments