FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முதல்வர் விஜய் ஆட்சியில் தூங்குகிறதா காவல்துறை? - நயினார் நாகேந்திரன் கேள்வி

முதல்வர் விஜய் ஆட்சியில் தூங்குகிறதா காவல்துறை? என நயினார் கேள்வி எழுப்பியிருப்பது தொடர்பாக...

8 அக்டோபர் 2026, 1:03 pm IST
முதல்வர் விஜய் |பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை: தலைநகரில் 5 வயது குழந்தைக்குக் கூடப் பாதுகாப்பில்லை என்றும் முதல்வர் ஜோசப் விஜய்யின் தவெக ஆட்சியில் தூங்குகிறதா காவல்துறை? என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:

சமீபத்தில் கும்மிடிப்பூண்டியில் 3 வயது பிஞ்சுக் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட கொடூரச் சம்பவத்தின் துயரத்திலிருந்தே நாம் இன்னும் மீளவில்லை; அதற்குள் அடுத்த கொடூரமாக, சென்னை திருவொற்றியூரில் வடமாநிலத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த 5 வயது பிஞ்சுக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியிலும் பெருந்துயரிலும் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement

வாழ்வாதாரம் தேடி தமிழகத்தை நம்பி வந்த ஏழைத் தொழிலாளியின் குழந்தைக்குத் தலைநகரிலேயே பாதுகாப்பில்லாத அவல நிலையை எண்ணி நெஞ்சம் பதறுகிறது.

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான இத்தகைய கொடூரங்கள் தமிழகத்தில் அடுத்தடுத்துத் தொடர்கதையாகி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. வெற்றுப் பேச்சுகளால் அமைந்த தவெக ஆட்சியில்

சட்டம் - ஒழுங்கு முற்றிலும் முடங்கிவிட்டது. காவல்துறையையும் உள்துறையையும் தன் வசம் வைத்துள்ள முதல்வர் விஜய் செயலற்றுக் கிடப்பதால், மக்களே வீதியில் இறங்கிக் குற்றவாளிகளைப் பிடிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது.

குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீதான பயம் துளியும் இல்லாமல் போனதற்கும், குற்றங்கள் தலைவிரித்தாடுவதற்கும் இந்த ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடும் அனுபவமின்மையுமே முக்கியக் காரணம்.

இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் விரைவு நீதிமன்றம் மூலம் அதிகபட்சத் தண்டனையைப் பெற்றுத் தருவதோடு, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசே உயர்தர மருத்துவ சிகிச்சையை முன்னின்று வழங்க வேண்டும்.

இனியாவது வெற்றுப் பிம்ப அரசியலை விட்டுவிட்டு, பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாகக் களத்தில் இறங்கிக் கவனம் செலுத்த வேண்டும்; சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்றத் தவறினால், தவெக அரசுக்குத் தமிழக மக்கள் நிச்சயம் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.

Is the police force sleeping under CM Vijay's administration? – Nainar Nagendran questions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments