FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு? ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

தமிழக முதல்வர் விஜய்யுடன், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

10 அக்டோபர் 2026, 9:58 pm IST
எம்ஜிஆர் - விஜய் (ஏஐ சித்திரிப்பு) / முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
பகிர்:

தமிழக முதல்வர் விஜய்யுடன், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் விஜய்யுடன், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளி ஒன்றை தவெகவினர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்தனர்.

சமீபத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தவெக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, விஜய்யை எம்ஜிஆர் வாழ்த்துவது போன்று அந்த காணொலி எடிட் செய்யப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “சட்டப்பேரவைத் தேர்தலில் கன்டென்ட் கிரியேட்டர்கள் மூலம் போலியான பிம்பத்தை தவெகவினர் சமூக வலைதளங்களில் ஏற்படுத்தினர். தற்போதும் போலியான வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், விஜய்யை வாழ்த்துவது போல ஒரு போலியான வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஏஐ மூலம் எம்.ஜி.ஆர் - விஜய் ஒன்றாக இருப்பது போல போலியான விடியோவை தவெக வெளியிட்டுள்ளது. அதில் எம்ஜிஆர், விஜய்யைப் பார்த்து தொண்டர்களை பார்த்து கொள்ளுங்கள் என்றும் தலைமைச் செயலகத்திற்கு விஜயை அழைத்து செல்வது போலவும் வெளியிட்டுள்ளனர். இது மக்களை ஏமாற்றும் செயல்.

எம்.ஜி.ஆர் - விஜய் இருவருக்கும் என்ன தொடர்பு? விஜய் எப்போதாவது எம்ஜிஆரை சந்தித்துள்ளாரா? அம்மா, எடப்பாடியார் ஆகியோரிடம் தனது படங்களை வெளியிட காத்திருந்தவர் தான் விஜய்.

தற்போது போலியான வீடியோவை வெளியிட்டு முதல்வரே இப்படி ஒரு ஃபோர்ஜரி, 420 சீட்டிங் வேலையை செய்யலாமா?

இந்த வீடியோ முதலமைச்சருக்கு தெரிந்துதான் வெளியிடப்பட்டதா? அல்லது தெரியாமல் வெளியானதா? இதற்கு அனுமதி பெறப்பட்டதா அல்லது அனுமதி இல்லாமல் வெளியிடப்பட்டதா?

நான் தான் எம்.ஜி.ஆர் என்கிறார் விஜய். எம்.ஜி.ஆருடைய கால் தூசிக்கு கூட யாரும் இணையாக முடியாது. தொண்டர்கள் இந்த வீடியோவால் மனம் குமுறி வருகிறார்கள்.

புரட்சித்தலைவர் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் இருக்கிறோம். உங்களுக்குத்தான் கொள்கை தலைவர்கள் உள்ளார்களே. எங்க பாஸை ஏன் உங்க பாஸ் என்று கூறுகிறீர்கள்?

இந்த கீழ்த்தரமான அரசியலை இத்துடன் தவெக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்று செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.

அதிமுக சீனியர்களை பதவி ஆசைகாட்டி அழைத்தனர், அதிகாரத்தை வைத்து மிரட்டினார்கள், காவல்துறையினரை வைத்து பொய் வழக்கு போட்டனர்.

டிபன் பாக்ஸில் பணம் வைத்து கொடுத்து தாராபுரம் பார்முலா என ஒன்றை உருவாக்கி விட்டனர். முதல்வர் ஆகும் வரை விஜயின் கால் தரையில் படவில்லை. ஆனால், இப்போது முருங்கைக்காய் பறிக்கும் நிலைக்கு ஆளானார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர் தவெக செல்கிறார்கள், செல்லட்டும். ஆனால், தன்னை வளர்த்து ஆளாக்கிய கட்சியை அழிக்க நினைக்கிறார்கள். அதிமுக தொண்டனின் வயிறு எரிகிறது. அதிமுகவை அழிக்க நினைத்து திமுக தோற்று விட்டது. நேற்று முளைத்த காளான் தவெக, உங்களால் அது முடியாது.

தேர்தலில் ஒரு தோல்வி வந்தால் அதற்கு பிறகு தவெக தமிழ்நாட்டில் இருக்குமா? மக்களுக்காக போராடுமா? இடைத்தேர்லில் ஒரு ஆளும்கட்சி இவ்வளவு குறைவான வாக்கில் வென்றதே இல்லை. மக்களிடம் இந்த ஆட்சியின் மீது அவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது.

அதிமுக உங்களுக்கு என்னய்யா தீங்கு செய்தது? கரூரில் 41 பேர் இறந்த விவகாரத்தில் கூட உங்களுக்கு ஆதரவாக அரசியல் நாகரீகத்தோடு பேசியவர் எடப்பாடி. அதிமுக உங்களுக்கு என்ன துரோகம் செய்தது? அதிமுகவை ஏன் சுரண்டி பிழைக்கிறீர்கள்?

உங்கள் கட்சியை வளர்க்க சொந்தமாக உழையுங்கள். எடப்பாடியாருக்கு கவர்ச்சியை காட்டி மக்களை ஏமாற்றத் தெரியாது. எங்களுக்கு உழைக்க மட்டுமே தெரியும். 5 நிமிடம் முகத்தை காட்டினால் கொத்து பரோட்டா போட்டு விடுவேன் என சொன்ன விஜய், ஏன் இரண்டு நாள்கள் டிராக்டர் ஓட்டினார், முருங்கைக்காய் பறித்தார்?

மக்கள் இப்போது தான் கதறி அழுகிறார்கள். போகப்போக உங்களை மக்கள் சிதைத்து, சின்னா பின்னமாக்கி வீட்டுக்கு அனுப்புவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

summary

Former Minister R.B. Udhayakumar has expressed opposition to an AI-generated video showing former Chief Minister MGR conversing with Tamil Nadu Chief Minister Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments