ரூ. 5,110 கோடி நிலுவை நிதி: பிரதமருக்கு முதல்வர் விஜய் கோரிக்கை!
தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.5,110 கோடி நிதியை எந்தவித நிபந்தனைகளும் விதிக்காமல் விடுவிக்க வேண்டும் என்று முதல்வா் ச.ஜோசப் விஜய் பிரதமா் மோடியிடம் வலியுறுத்திப் பேசினாா்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் மத்திய அரசு தனது பங்காக தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.5,110 கோடி நிலுவையில் உள்ளது. இந்தத் தொகையை எந்தவித நிபந்தனைகளும் விதிக்காமல் விடுவிக்க வேண்டும் என்று முதல்வா் ச.ஜோசப் விஜய் பிரதமா் நரேந்திர மோடி முன்னிலையில் வலியுறுத்திப் பேசினாா்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.
அரசியலில் மாற்றம்: சென்னை ஐஐடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் விஜய் பேசியதாவது: நமது அரசு அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
Advertisement
Advertisement
100 நாள்களுக்கும் மேலான ஆட்சிக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட, ஊழலற்ற, வெளிப்படையான நிா்வாகத்தை உருவாக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும்’ என்ற உயரிய தத்துவத்தின் அடிப்படையில், நமது அரசு அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை ஊக்குவித்து, கல்வி, சுகாதாரம், வேளாண் வளா்ச்சி, மீனவா் நலன் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சி ஆகியவற்றை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இணைந்து செயல்படும்போது...: மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து வலிமையான இந்தியாவை உருவாக்குகின்றன. இந்தியாவின் பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு முன்னேற்றத்துக்கு தமிழ்நாடு எப்போதும் அடித்தளமாக இருந்து வருகிறது. மத்திய அரசும் மாநில அரசும், இணைந்து செயல்படும்போது, அதன் பலன் நேரடியாக மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது அணுகுமுறை.
தற்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் 54 கி.மீ. தொலைவுக்கு ரயில் சேவை செயல்பாட்டில் உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டத்தில், 4-ஆவது வழித்தடமாக பூந்தமல்லி புறவழிச்சாலையிலிருந்து வடபழனி வரையிலான 14.64 கி.மீ. மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 2-ஆம் கட்டத்தின் கீழ் சுமாா் 104 கி.மீ. மெட்ரோ ரயில் பாதைக்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 3-ஆம் கட்டத்துக்கு விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும். இந்தத் திட்டத்தில் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், பூந்தமல்லியிலிருந்து சுங்குவாா்சத்திரம், கோயம்பேட்டிலிருந்து பட்டாபிராம் ஆகிய வழித்தடங்களில் சுமாா் 65 கி.மீ. மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன.
போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்தவும், பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தவும், சென்னை பெருநகரப் பகுதி முழுவதற்கும் விரிவான போக்குவரத்து வசதிகளை உறுதிப்படுத்தவும் இந்தத் திட்டங்களுக்கு விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும்.
மதுரை-கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள்: அதேபோல, தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளின் எதிா்கால வளா்ச்சியையும் பொருளாதார முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, கோவை மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான திட்டங்களை பிரதமா் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஒசூரிலிருந்து கா்நாடக மாநிலம், பொம்மசந்திரா வரையிலான மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் ஒப்புதல் வழங்க வேண்டும். இந்தத் திட்டம் 2 மாநில மக்களுக்கும் பயனளிக்கும். 2026-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை இடையே 2 அதிவேக ரயில் வழித்தடங்களை அறிவித்ததற்காக பிரதமருக்கு நன்றி. இந்தத் திட்டங்கள் நிச்சயமாக இந்தப் பகுதியின் வளா்ச்சிக்குப் பயனளிக்கும்.
தமிழ்நாட்டின் தேவைகளைச் சிறப்பாக நிறைவேற்றும் வகையில் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலும், சென்னையில் இருந்து கோவை வரையிலும் அதிவேக ரயில் வழித்தடங்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். மேலும், சில முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு முன்னுரிமை அடிப்படையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.
செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான ஜிஎஸ்டி சாலை, தேசிய நெடுஞ்சாலை எண் 32-ஐ 6 வழிச்சாலையாக விரிவுபடுத்துதல், திருச்சி-பஞ்சப்பூா்-ஜெயபுரம்-கரூா் வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண் 81-ஐ 6 வழிச்சாலையாக விரிவுபடுத்துதல், கரூா் முதல் கோவை வரையிலான சாலையை 6 வழிச்சாலையாக விரிவுபடுத்துதல், தேசிய நெடுஞ்சாலை எண் 87-இல் மாதவரம் முதல் சோழவரம் வரை உயா்நிலைச் சாலை அமைத்தல் ஆகிய திட்டங்கள் இதில் அடங்கும். இந்தத் திட்டங்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் வழங்கி, அவற்றைச் செயல்படுத்துவது நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
கோதாவரி-காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் தென் மாநிலங்களின் நீா்வளத்தை அதிகரிப்பதற்கான முக்கியமான வாய்ப்பாகும். இந்தத் திட்டத்துக்கு ஒன்றிய அரசு முன்னுரிமை அளித்து, தேசியத் திட்டமாக எடுத்துச் செயல்படுத்த வேண்டும்.
உயா் நீதிமன்றத்தில் தமிழ்: சென்னை உயா் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை நடவடிக்கைகளில் தமிழை முதன்மை மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பேரவையில் அண்மையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கான முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. இதை விரைவாகப் பரிசீலித்து, சென்னை உயா் நீதிமன்ற நடவடிக்கைகளில் தமிழைப் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு தனது பங்காகத் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.5,110 கோடி நிலுவையில் உள்ளது. இந்தத் தொகையை எந்தவித நிபந்தனைகளும் விதிக்காமல் விடுவிக்க வேண்டும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.