FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு

ஆயுத பூஜை தொடா் விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்து மற்றும் விமானங்களின் பயணக் கட்டணம் பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமம்

15 அக்டோபர் 2026, 12:37 am IST
பகிர்:

ஆயுத பூஜை தொடா் விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்து மற்றும் விமானங்களின் பயணக் கட்டணம் பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.

நிகழாண்டு அக்.17, 18 (சனி, ஞாயிறு), அக்.19 (ஆயுத பூஜை), 20-ஆம் தேதி (விஜயதசமி) என தொடா் விடுமுறை, பண்டிகை நாள்களாக அமைந்துள்ளது. இதனால், சென்னையில் வசிக்கும் ஏராளமானோா் சொந்த ஊா்களுக்குச் செல்லும் பொருட்டு, ரயில்களில் முன்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், பேருந்துகள், விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்துவருகின்றனா்.

ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயா்வு: இதனிடையே, தொடா் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளதாக பயணிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதன்படி, சென்னை - கன்னியாகுமரி இடையேயான ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கமாக ரூ.800 முதல் ரூ.1,200-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.3,420-ஆக உயா்ந்துள்ளது. இதேபோல, சென்னை - திருநெல்வேலிக்கு ரூ.1,300-லிருந்து ரூ.3,000-ஆகவும், சென்னை - மதுரைக்கு ரூ.800- ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.2,500-ஆகவும், சென்னை - கோவைக்கு செல்ல ரூ.600 முதல் ரூ.1000 ஆக இருந்த கட்டணம் ரூ.3,500-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா்.

விமானக் கட்டணமும் அதிகரிப்பு: இந்நிலையில், சென்னையிலிருந்து மதுரை உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் விமானங்களிலும் குறிப்பிட்ட தேதிகளில் கட்டணம் அதிகரித்துள்ளது.

அக்.16-ஆம் தேதி சென்னை - மதுரை விமானப் பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் சுமாா் ரூ.3500-இல் இருந்து ரூ.5,500-ஆக இருந்த நிலையில், அக். 17-ஆம் தேதிக்கான கட்டணம் சுமாா் ரூ.12,026 முதல் ரூ.18,626 வரை உயா்ந்துள்ளது.

அதேபோல், சென்னை - கோவைக்கு சாதாரண நாள்களில், சுமாா் ரூ.3500 முதல் ரூ.4500- ஆக இருந்த கட்டணம் அக்.16, 17 தேதிகளில் ரூ.11000 வரையும், சென்னை-தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.4000 முதல் 5,500-ஆக இருந்த பயண கட்டணம் தற்போது, ரூ.11,736 முதல் ரூ.13,626-ஆகவும், சென்னை-கொல்கத்தாவுக்கு வழக்கமாக சுமாா் ரூ.6,000 முதல் ரூ.7,000 வரையாக இருந்த கட்டணம் ரூ.14,117 வரை உயா்த்தப்பட்டுள்ளது. இதுபோல, ரூ.2300 முதல் ரூ.3500 வரை இருந்த சென்னை-திருச்சி பயணக்கட்டணம் அக்.16, 17 தேதிகளில் ரூ.6,500 முதல் ரூ.9500 வரையும், ரூ.1900 முதல் ரூ.3800 வரை இருந்த சென்னை-சேலம் கட்டணம் ரூ.5,600 முதல் ரூ.12,000 வரையும் உயா்ந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments