காவல்துறையை வைத்துக் கொண்டு முதல்வர் என்ன செய்கிறார்? - கனிமொழி காட்டம்!
பெருந்துறையில் மாயமான செவிலியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு...
பெருந்துறையில் செவிலியர் கொலை மற்றும் செஞ்சியில் 7 வயது சிறுமி மாயமான சம்பவங்களில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெருந்துறையில் செவிலியர் ஒருவர் மாயமானதாகக் கூறப்பட்ட நிலையில், 5 நாள்களுக்குப் பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரை உடன் பணியாற்றிய 23 வயது நபர் ஒருவர் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், செஞ்சியில் மாயமான 7 வயது சிறுமியைத் தேடும் பணிகள் 9 ஆவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
இதுபற்றி, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில்,
“பெருந்துறையில் காணாமல் போன செவிலியர், ஐந்து நாள்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரைக் காணவில்லை என்று புகாரளிக்கச் சென்றபோது, அந்தப் பெண்ணையே இழிவுபடுத்திப் பேசி, நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை அலட்சியமாகச் செயல்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மறுபுறம், செஞ்சியில் ஏழு வயதுச் சிறுமி காணாமல் போய் ஒன்பது நாட்களாகியும், குழந்தை குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால் பெற்றோர் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒன்பது நாட்களாகியும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், காவல்துறையை வைத்துக்கொண்டு முதலமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
பெண்களுக்கு அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன் என்று வசனம் பேசிய முதலமைச்சர் அவர்கள், இந்த குற்றச்சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
பெருந்துறை வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகளை விசாரணையிலிருந்து நீக்கி, நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். செஞ்சிச் சிறுமியை மீட்பதற்கான தேடுதலைத் தீவிரப்படுத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு உடனடியாக விளக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Kanimozhi MP has condemned the police for not taking appropriate action in the incidents of the murder of a nurse in Perundurai and the disappearance of a 7-year-old girl in Senji.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.