திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்
திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டது பற்றி...
திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஜோசப் விஜய் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில் குடிநீர், பாதாள சாக்கடை, பூங்காக்கள், திடக்கழிவு மேலாண்மை, சாலைகள் உள்ளிட்டவையை மேம்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஜோசப் விஜய், 110 விதியின் கீழ் இன்று அறிவித்தார்.
அப்போது விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வது தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக முதல்வர் விஜய் பேசியதாவது:
”கடந்த 2021 மே முதல் 2026 ஏப்ரல் வரை, தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.
ஜனநாயக உரிமைகளை மதிக்கும் நமது அரசு, கடந்த ஆட்சியாளர்களால் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய போது அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது.
விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும், அவர்களது நியாயமான கோரிக்கைக்களுக்கும் இவ்வரசு உறுதுணையாக நிற்கும்.
திருவண்ணாமலை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், சில விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் போடப்பட்டது.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக, விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற நோக்கத்தோடு, விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று போராடிய விவசாயிகள் மீதும் முந்தைய அரசால் மனித நேயமற்ற வகையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கை ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதோடு, சாமானிய மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
Cases filed against farmers and teachers during the DMK regime dropped! Chief Minister Vijay
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.