FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கோயில்களில் யாருக்கெல்லாம் செல்போனுக்கு தடையில்லை? அமைச்சர் ரமேஷ் விளக்கம்!

கோயில்களில் மொபைல் போனுக்கு ரூ. 5 வசூலிப்பது ஏன்? என்பது குறித்து அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளதைப் பற்றி...

3 செப்டம்பர் 2026, 10:39 am IST
அமைச்சர் ரமேஷ் - திருச்செந்தூர் கோயில்.
பகிர்:

கோயில்களில் யாருக்கெல்லாம் செல்போனுக்கு தடையில்லை என்பது குறித்தும், மொபைல் போனுக்கு ரூ. 5 வசூலிப்பது ஏன்? என்பது பற்றியும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் சில பக்தர்கள் பிரகாரங்கள், சிற்பங்கள் முன்பு மொபைல் போன்களில் செல்ஃபி, ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுகின்றனர். கோயில் கருவறையில் உள்ள சிலைகளைப் புகைப்படம், விடியோ எடுத்து வெளியிடுகின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பிற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 52 முக்கிய கோயில்களில், செப். 1 முதல் பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்வதற்கான தடை அமலுக்கு வந்தது. மேலும், கோயில் வளாகத்தில் மொபைல் போன்கள் வைக்க கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

செல்போன்களுக்கு ரூ. 5 வசூலிக்கப்படும் என்று தகவலுக்கு பல்வேறு எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்த நிலையில், இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் ரமேஷ் பேசுகையில், “இது ஒன்றும் புதிய நடைமுறை எல்லாம் கிடையாது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் செல்போன் பயன்படுத்துவது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்திரநாராயணன் ஆகியோர், ‘தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் செல்போன் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தனர்.

அப்போதில் இருந்தே திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழனி முருகன் கோயில், ராமேசுவரம் ஆகிய கோயில்களில் செல்போனுக்கான தடைவிதிக்கும் நடைமுறை தொடர்ந்து வருகிறது. அதை விரிவாக்கம் செய்யும் விதமாக செல்போன் வைக்க கவுண்ட்டர்கள் இல்லாத 52 கோயில்களில் அதனை செயல்படுத்தியிருக்கிறோம். மக்களை கஷ்டபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதையும் செய்யவில்லை.

எந்தவொரு கோயிலிலும் இது கடினமான சூழலாக மாறிவிடக் கூடாது; மொபைல் போன் வைப்பதற்கே மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கக் கூடாது என்பதற்கேற்ப அந்தந்த கோயில்களில் நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளை வைத்திருபோர், கர்ப்பிணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய தேவையில்லை. கேமரா மொபைல்களைத் தவிர்த்து சாதாரண பட்டன் போன் வைத்திருப்பவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது.

நீதிமன்ற உத்தரவின் படியே அதனை விரிவாக்கம் செய்திருக்கிறோம். போனுக்கு ரூ. 5 வசூலிப்பதைக்கூட யாருடைய வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக என்பதைப் போன்று தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

மொபைல் கவுண்ட்டர்களில் பணியாற்றுபவர்கள் அதிகளவில் மகளிர் சுய உதவிக்குழுக்களில் இருப்பவர்கள். அவர்களுக்கு ஊதியமாக வழங்குவதற்காகவும் கோயில்களுக்கு வரும் ஏழை, எளியோருக்கு அன்னதானமாக வழங்குவதற்கும் பயன்படும்.

கண்மூடித்தனமாக எதிர்க்கக் கூடாது. நாங்கள் மக்களுக்கான அரசு. கோயில் அரசியல் செய்வதற்கான இடம் அல்ல; பக்தர்களுக்கு இதில் ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால் பொதுமக்களிடமிருந்து கருத்துகளை உடனடியாகப் பெற்று, அதன் அடிப்படையில் மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

கூட்டம் அதிகமாக இருக்கும் விசேஷ நாள்களில், மொபைல் போன் கவுண்ட்டர்களில் மொபைல்களை ஒப்படைக்க வேண்டாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

summary

P.K. Sekar Babu, the Minister for Hindu Religious and Charitable Endowments, has clarified who is exempt from the ban on mobile phones in temples and explained the reason for charging a ₹5 fee for mobile phones.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments