பிரதமர் வேட்பாளர்; தொண்டர்களின் மனநிலையில் இருக்கும் தவெக அமைச்சர்கள்: திருமாவளவன்
செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் தெரிவித்தது குறித்து....
தொண்டர்களின் மனநிலையில் தவெக அமைச்சர்கள் இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், தமிழக சட்டப்பேரவைத் கூட்டத்தொடரில் மிக முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டு வருவதற்கான சூழல் கனிந்திருப்பதை அமைச்சர் வன்னியரசு உறுதி செய்துள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவின்படி ஆணவக் கொலை தடுப்பு மசோதா வரையறுக்கப்படும் என்று இந்தக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தை அவர்களே ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
அடுத்த கூட்டத்தில் விரிவாக பேசுவோம் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது கூட்டம் நடைபெறுகிறது. இதில் யார் யார் பங்கேற்கிறார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்பது கூட்டம் நடைபெறும் போதுதான் தெரியவரும்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் தெரிவிக்கும் கருத்துகளில் நகைச்சுவைக்காகக் கூறப்படும் கருத்துகளை நகைச்சுவையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் ஆட்சியில் இருந்தாலும் சட்டம்–ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகள், ஆசிரியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதாக முதல்வர் 110 விதியின் கீழ் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது” என்றார்.
செய்தியாளர் சந்திப்பு முடிந்த பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதமர் வேட்பாளர் விஜயா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு பதிலளிக்க மீண்டும் திரும்பி வந்த தொல். திருமாவளவன், ”தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னணித் தலைவர்கள் பிரதமர் வேட்பாளர் விஜய் என இதுவரை பேசவில்லை. ஆனால் மற்றவர்கள் அவ்வாறு பேசி வருகின்றனர். அதைக் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்று எடுத்துக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்தார்.
”என்னதான் அமைச்சர்களாக இருந்தாலும், தொண்டர்களின் மனநிலை இருக்கத்தான் செய்யும். வடஇந்திய ஊடகங்கள் பிரதமர் வேட்பாளர்கள் வரிசையில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோருடன் விஜய்யையும் குறிப்பிட்டு வருவதைப் பார்க்கிறோம்.
இதன் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாகத்துடன் அவ்வாறு பேசி வருகிறார்கள். ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லை என்று யாரும் கூறவில்லை. பிரதமர் வேட்பாளர் தொடர்பாக பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். 2029 தேர்தல் வரட்டும், அப்போது அது குறித்து கூறுகிறேன்” என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
Viduthalai Chiruthaigal party (VCK) leader Thol. Thirumavalavan has stated that TVK ministers share the same mindset as the party cadres.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.