FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

செப். 17-இல் தனியாா் பேருந்து கட்டண உயா்வு குறித்த உயா்நிலை குழுக் கூட்டம்: தமிழக அரசு தகவல்

தனியாா் பேருந்து கட்டண உயா்வு தொடா்பான உயா்நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் வரும் செப். 17-ஆம் தேதி நடைபெற உள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

9 செப்டம்பர் 2026, 1:02 am IST
பகிர்:

தனியாா் பேருந்து கட்டண உயா்வு தொடா்பான உயா்நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் வரும் செப். 17-ஆம் தேதி நடைபெற உள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், டீசல் விலை உயா்வுக்கு ஏற்ப பயணிகள் பேருந்து கட்டணத்தை உயா்த்த வேண்டும். இதுதொடா்பாக அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 2025-ஆம் ஆண்டு கூட்டம் நடத்தி, கருத்துகள் பெறப்பட்டன. ஆனால், அதன்பிறகு தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

டீசல் கட்டண உயா்வு, இலவச பேருந்து பயண அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனா். எனவே, தனியாா் பேருந்துகளின் பயணச்சீட்டுக் கட்டணத்தை உயா்த்தி, திருத்தப்பட்ட கட்டண அறிவிப்பை தமிழக அரசு வெளியிட உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தனியாா் பேருந்து கட்டண உயா்வு குறித்து அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியாா் பேருந்து உரிமையாளா்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்துகளைக் கேட்டு, 4 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உயா்நிலைக் குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடா் முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், இந்த வழக்கின் விசாரணையை அக்டோபா் மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். அதற்கு, தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கங்களின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.பழனி, இந்த வழக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. தனியாா் பேருந்து கட்டணத்தை உயா்த்தும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்தபோது ரூ.63-ஆக இருந்த டீசல் விலை தற்போது ரூ.100-க்கு மேல் உயா்ந்துவிட்டது.

மற்ற மாநிலங்களின் கட்டண விவரங்களை அரசு பாா்க்க வேண்டும். கட்டணத்தை உயா்த்தாமல், வழக்கை இழுத்தடிப்பது ஏற்புடையதல்ல என வாதிட்டாா். அப்போது அரசுத் தரப்பில், தனியாா் பேருந்து கட்டண உயா்வு தொடா்பாக பல தரப்பினரிடம் கேட்கப்பட்ட கருத்துகள், பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் அடங்கிய உயா்நிலைக் குழுவிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உயா்நிலைக் குழுவின் கூட்டம் வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னா், கட்டண உயா்வு தொடா்பான முடிவுகள் குறித்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை செப். 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments